;
Athirady Tamil News

சென்னையில் 6 நாட்களில் 25 ஆயிரம் தெருக்களில் கொசு ஒழிப்பு பணிகள்!!

0

சென்னை மாநகராட்சி பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 6 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 2,449 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 2,478 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்புப் புகைபரப்பியும், 25,435 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகைபரப்பியும், நீர்நிலைகளில் 437 கி.மீ. நீளத்திற்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக் கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

436 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்தப் பணிகளுக்காக நவீன எந்திரங்களான 4 ரோபோடிக் எந்திரங்கள், நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையிலான 3 சிறிய மற்றும் 2 பெரிய ஆம்பி பியன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேயர் ஆர்.பிரியா பொது சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்பட்ட வாகனங்களை கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள தொடங்கி வைத்தார்கள். கொசு ஒழிப்புப் பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், கடந்த ௭ நாட்களாக கொசு ஒழிப்புப் பணிகள் 2 மடங்காக மேற்கொள்ளப்பட்டு வருவதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், நீர்வழித்தடங்களில் கொசுப் புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த டிரோன் எந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மழைநீர் வடிகால்களில் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை மேற் கொள்ள தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றி கிணறு, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒரு முறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியினை தடுத்திடும் வகையில் அக்குழாய்களில் கொசு புகாவண்ணம் வலையினை அவசியம் கட்டிட வேண்டும். அந்த குழாய்களில் கொசு வலை கட்டப்படவில்லை என்றால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.