;
Athirady Tamil News

3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை- மேகாலயாவில் இழுபறி நீடிப்பு!!

0

வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.

பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

மற்றவை ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின. இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

நாகா மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி யுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியது.

இதில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தேசிய மக்கள் கட்சி 22 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், முன்னிலையில் இருந்தன. மற்ற கட்சிகள் 26 இடங்களில் முன்னிலை வகித்தன. இதன் மூலம் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.