;
Athirady Tamil News

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக ஏமாற்றி கப்பல் கேப்டனிடம் ரூ.2 கோடி சுருட்டல்: கணவன்-மனைவி மீது வழக்கு!!

0

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் புகாரி. இவர் வெளிநாட்டில் தனியார் கப்பல் நிறுவனத்தில் கேப்டனாக உள்ளார். இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- எனக்கும் எனது குடும்பத்து நெருங்கிய உறவினர்களாகவும், எனது நண்பர்களாகவும் சென்னை மதுரவாயலை சேர்ந்த யாஸ்மின் பானு மற்றும் அவரது கணவர் எஸ்.எம்.பி. சாதிக் ஆகியோர் இருந்து வந்தனர். தனது கணவர் சாதிக் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருவதாகவும் அதில் இருந்து லாபம் ஏற்படுத்தி தருவதாகவும், நீங்கள் இந்த தொழிலில் முதலீடு செய்தால் அதற்கு பதிலாக வியாபாரத்தில் வரும் லாபத்தில் 50 சதவீதம் தந்து விடுவதாக நம்பிக்கை வார்த்தை மூலம் யாஸ்மின் என்னிடம் அடிக்கடி பேசி வந்தார்.

அவரது கணவர் சாதிக்கும் யாஸ்மினும் சேர்ந்து எனது வீட்டுக்கு வந்து அவர்களது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யுமாறு என்னை மூளைச் சலவை செய்தனர். இதனால் நானும் அவர்களது பேச்சை நம்பி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் காண்பிக்கும் இடங்களை நான் அனுப்பும் பணத்தில் வாங்க ரூ.2 கோடியே 26 லட்சம் வரை இருவரும் வங்கிக் கணக்குகள் மூலமாகவும் ரொக்கமாகவும் பெற்றுக் கொண்டனர். மேலும் நான் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்ததால் என்னிடம் வாங்கிய பணத்திற்கு நிலங்களை அவர்கள் தங்கள் இருவர் பெயரிலேயே வாங்கிக் கொள்வதாகவும், அவற்றை விற்ற பின்னர் அதன் முதலீட்டையும், லாபத்தையும் எனக்கு முறையாக கணக்குக் காட்டி ஒப்படைத்து விடுவதாகவும் உறுதியளித்தனர்.

அந்த வகையில் நானும் நம்பிக்கையின் பேரில் அதற்கு சம்மதித்தேன். சாதிக்கும், யாஸ்மின் பானுவும் ஒரு கார் வாங்கி வாடகைக்கு விட்டால் அதிலும் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி அதில் வரும் வருமானத்தையும் என்னிடம் தந்து விடுவதாகவும் கூறினார். நானும் அதை நம்பி மதுரையில் உள்ள மாருதிகார் விற்பனை நிலையத்தில் இருந்து மாருதி ஸ்விப்ட் காரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி கொடுத்து எனது பெயரிலேயே பதிவு செய்தும் கொடுத்தேன்.

அந்த காரினை சாதிக்கும் அவரது மனைவி யாஸ்மினும் பயன்படுத்தி வந்தனர். இந்த பணத்துக்குரிய லாபத் தொகை தொடர்பாக சாதிக்கிடமும், யாஸ்மினிடமும் கேட்டபோது அதற்காக உறுதி பத்திரம் எழுதி தந்து விடுகிறேன் என்று கூறி அவர்கள் எனக்கு தர வேண்டிய ரூ.2 கோடியே 26 லட்சம் பணத்தில் மேற்படி எதிரிகள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நான்கு கடன் ஒப்பந்த பத்திரத்தில் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு மட்டும் எழுதி தந்தனர். மீதத் தொகை ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் குறித்து கேட்டபோது எங்களுக்கு கணக்கு தணிக்கை பிரச்சினை வரும். ஆகையால் எங்களது கணக்கு தணிக்கை அதிகாரியிடம் கேட்டு மீதத் தொகையான ரூ.1 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரம் எழுதி தருகிறோம் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில் நான் வேலை நிமித்தமாக கப்பலுக்கு வெளிநாட்டுக்கு போக வேண்டி இருந்ததால் மீதி தொகைக்கு எழுதி வாங்க வேண்டிய கடன் பத்திரங்களை என்னால் எழுதி வாங்க இயலவில்லை. பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு வருட வாய்தா காலமும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் மேற்படி யாஸ்மின் பானு, சாதிக்கை அணுகி பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தையெல்லாம் திருப்பித் தர முடியாது. இன்னுமா எங்களை நம்பிக் கொண்டிருக்கிறாய் கொடுத்த பணத்தை கேட்காமல் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் கூலிப் படையை ஏவி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தனர்.

எனவே சாதிக் மற்றும் அவரது மனைவி யாஸ்மின் ஆகியோர் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மோசடி செய்து அபகரித்த பணத்தை மீட்டு கொடுத்து எனது உயிருக்கும், உட மைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு போலீசார், கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மனைவி யாஸ்மின் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். சாதிக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.