;
Athirady Tamil News

கூடுதல் வரதட்சணை கேட்டு தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ர்த்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர். நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர். நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது மணப்பெண் மண்டபத்திற்கு வர மறுத்தார்.

கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார். மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை. மணமகளின் முடிவு குறித்து திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் திருமணம் நின்றது. களைகட்டி இருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்தனர். பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.