சிறுவாபுரி முருகன் திருக்கோவில் லட்சார்ச்சனையில் நடிகர் எஸ்.வி.சேகர் குடும்பத்துடன் பங்கேற்பு!!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினர் ரூ.1.25 கோடி செலவில் புனரமைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கோயிலுக்கு வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் தொடர்ந்து 6 வாரங்கள் வருகை தந்து முருகப்பெருமானை நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், கல்யாணம், வேலை வாய்ப்பு வியாபாரம் குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 3-வது ஞாயிற்றுகிழமை இத்திருக்கோயிலில் இலட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் மூலவருக்கு 18 வித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி சேவையில் மூலவர் அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து 18 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஒதிட இலட்சார்ச்சனை நடைபெற்றது.
இதில்,சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி தலைவர் ஜான்சிராணி ராஜா, துணைத்தலைவர் சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி. இலட்சுமணன், தக்கார் சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.செந்தில்குமார், உபயதாரர் கதிர்மணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.