கட்டிட வரைபட அனுமதியை இணையதளத்தில் பெறலாம்!!
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- கட்டிட வரைபடம் மற்றும் மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும். தெருநாய்களுக்கான இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக 5,145 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் 10 ஆயிரம் குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டம் ரூ.7145 கோடியில் செயல்படுத்தப்படும். கோவையில் செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும். ஈரோடு அந்தியூரில் 80567 ஹெக்டேர் பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.