;
Athirady Tamil News

உலக அமைதி கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் அமைப்பு- உலகின் பல பகுதிகளில் இருந்து துறவிகள் பங்கேற்பு!!

0

இன்றைய உலகில் இயற்கை மாற்றங்களாலும், பல விதமான வன்முறைகளாலும் அழிவை நோக்கி செல்லும் நிலையில் அமைதியை போதித்த புத்தரின் பொன்மொழிகளை பின்பற்ற கூடிய காலம் தற்போது உள்ளது. முன்னொரு காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலககெங்கும் புத்தஅமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார். இந்தியா சுதந்திரம் பெற புத்தரின் கோட்பாட்டை பின்பற்றி மிக சிறந்த வழியான அகிம்சையை பின்பற்றி அதில் வெற்றியும் கண்டார்.

அதனை தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ குருஜீ என்பவர் உலகத்தில் அமைதி நிலவ உலகெங்கிலும் புத்த அமைதி கோபுரங்களை உருவாக்க முயன்றார். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு உதவியுடன் தாமரை சூத்திரத்தை புத்தர் முதன்முதலில் உபதேசம் செய்த பீகார் மாநிலம் ராஜ்கீர் மலையில் புத்த அமைதி கோபுரத்தை அமைத்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி கோபுரத்தை திறந்து வைத்தார். அதனை தொடந்து 6 வட இந்திய மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தென்னிந்தியாவில் உலக அமைதி கோபுரத்தை நிறுவ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000-ம் ஆண்டு புத்தர் கோவில் கட்டுவதற்க்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.

அந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அமைதியான சூழலில் அமைதிக்கான கோவில் கட்ட ஏதுவாக அமைந்தது. அதனை தொடர்ந்து நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனீகள் சார்பில் கோவில் கட்டப்பட்டது. அதனை தெடர்ந்து தென்னிந்தியாவில் முதன் முதலாக உலக அமைதிக்காக 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரத்தில் கடந்த 2020-ம் மார்ச் மாதம் 4-ந் தேதி உலக அமைதி கோபுர உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு வெளிநாட்டினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உலக அமைதி கோபுரத்தில் புத்தர் சிலைகள் அமைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரன் கோவில் புத்தர் கோவிலை சேர்ந்த புத்த பிக்கு இஸ்தானிஜி புத்த பிக்குனிகள் லீலாவதி, கிமூரா தலைமையில் இலங்கை, ஜப்பான், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புத்த துறவிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலக அமைதி கோபுரத்தில் தெற்கு திசையில் ஞானம் போதிப்பது போன்ற புத்தர் சிலையும், மேற்கு திசையில் சயன கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையும், வடக்கு திசையில் குழந்தை பருவத்தில் உள்ள புத்தர் சிலையும், கிழக்கு திசையில் மக்களுக்கு அருளாட்சி வழங்குவது போன்ற புத்தர் சிலை ஆகிய 4 புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டது. அந்த சிலைகளுக்கு புத்த பிக்குகள், புத்த பிக்குணிகள், சர்வ சமயத்தை சேர்ந்தவர்கள், புத்த துறவிகள் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் புத்தரை வழிபட்டுச் சென்றனர்.

இதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, தனுஷ்குமார் எம்.பி., கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கனகம்மாள் மற்றும் மங்களத்துரை, ஆசிரியர் குருசாமி, முருகேசன், வக்கீல்கள் மருதப்பன், ரவிசங்கர், ராமராஜ், கண்ணன் மற்றும் பிரஜா பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஓம் சக்தி வழிபாட்டு குழுவினர், கிறிஸ்தவ அமைப்பினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சர்வ சமய பிரார்த்தனை நடத்தினர். நிகழ்ச்சியில் புத்தர் கோவில் கட்டுவதற்க்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், நிப்போசன் மியோ போகி அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.