;
Athirady Tamil News

105 கிலோ வெள்ளி நகைகளை போலீஸ் நிலையத்தில் இருந்து திருடிய பெண் போலீஸ்!!

0

சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் சந்தான பாரதி, மணிகண்டன். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 105 கிலோ எடை உள்ள ரூ 75 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ரூ 2.04 லட்சத்தை காரில் சென்னைக்கு கொண்டு வந்தனர். அப்போது சிறப்பு அமலாக்க துறை அதிகாரிகள் பஞ்ச காலா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த தமிழக வியாபாரிகளின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கொண்டுவரப்பட்ட 105 கிலோ வெள்ளி நகைகள், ரூ 2.04 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி நகைகள் மற்றும் பணத்திற்கு உண்டான ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் தமிழக வியாபாரிகளிடம் கேட்டனர் ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகை பணத்தை பறிமுதல் செய்து கர்னூல் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரம சிம்மனிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்யவில்லை நகை, பணத்திற்கு உண்டான எந்த தகவலையும் அங்குள்ள பதிவேட்டில் பதியவில்லை. நகை பணத்தை போலீஸ் நிலையத்தில் உள்ள பீரோவில் வைத்து பெண் போலீஸ் ஒருவரை நகைகளை பாதுகாக்க நியமித்தார். கடந்த 2ஆண்டுகளில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தாலுகா போலீசில் வேலை செய்து வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

தற்போது ராமலிங்கய்யா என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்த நிலையில் சென்னை வியாபாரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் படி நகை பணத்தை பெறுவதற்காக கர்னூல் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். நகை பணத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த வெள்ளி நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது. நகை பணம் காணாமல் போனது குறித்து கர்னூல் போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுசலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகை பணம் காணாமல் போனது குறித்து கடந்த 2021 முதல் போலீஸ் நிலையத்தில் வேலை செய்த காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் நகை பணத்தை பாதுகாக்க நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ஆண் போலீஸ் ஒருவர் உதவியுடன் நகை பணத்தை திருடிக் கொண்டு ஆட்டோவில் எடுத்துச் சென்று கர்னூலில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை விற்பனை செய்தனர். பின்னர் வெள்ளி நகைகளுக்கு பதிலாக 30 பவுன் நகைகளை வாங்கி உள்ளனர். மேலும் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தில் சொகுசு கார் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலர் வீட்டிற்கு சென்ற போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாயமானது தெரியவந்தது.

நகை பணத்தை எடுத்துச் செல்ல உதவி செய்ததாக ஆட்டோ டிரைவரையும், திருட்டு நகைகளை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர். டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் மூலம் மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு காரில் வந்த பெண் போலீஸ் மற்றும் அவருக்கு உதவிய ஆண் போலீஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். நகைகளை பாதுகாக்க வேண்டிய போலீஸ் ஒருவரே நகைகளை திருடி சென்று விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.