;
Athirady Tamil News

விண்வெளி ஆராய்ச்சிகளில் கை கோர்க்கும் இந்தியா, அமெரிக்கா !!

0

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ – பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய – அமெரிக்க உறவு தொடர்பாக கூறியதாவது ”இந்தியா மிகப் பெரிய சக்தி.

அமெரிக்க அணியைச் சேர்ந்த நாடு அல்ல இந்தியா. அந்த நாடு ஒருபோதும் அமெரிக்க அணியில் இணையாது. இரு நாடுகளும் நெருக்கமான உறவில் இருக்க முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல.

ஒரு மிகப் பெரிய சக்தியாக இந்தியா உலக அளவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் காரணமாகவே, இருதரப்பு உறவின் அவசியத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான சந்திப்பு ஏற்கெனவே வலிமையடைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைத்து வந்த மிக உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடனான கலந்துரையாடல் தற்போதுதான் முடிவடைந்தது.

இந்தக் குழு வேறு எந்த நாட்டிற்கும் சென்றதில்லை. எந்தெந்த துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த முடியும் என்பது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆலோசித்துள்ளோம்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயில வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

அதேபோல், இந்திய பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் அமெரிக்க மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்றும் விரும்புகிறது.

மக்களுக்கு இடையேயான தொடர்பு, கல்விசார் தொடர்பு, சுகாதார உறவு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

விண்வெளி ஆராய்ச்சியிலும் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். எனவே, இதற்கான திட்டம் என்பது மிகப் பெரியது. கனவு மிகப் பெரியது. ”என்று அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.