;
Athirady Tamil News

பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்!!

0

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா ‘அதிரடி’ விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடுவது அல்லது உடைந்து சிதறிவிடும். மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை அசுர ‘முத்தம்’ இட்டதும் நடந்திருக்கிறது. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவான பெரும்பள்ளங்கள் இன்றும் பூமியின் முகத்தில் ‘தழும்புகளாய்’ காட்சி அளிக்கின்றன.

எனவே, பாறை, உலோகம் அல்லது பனியால் ஆன இந்த சிறு, குறுங்கோள்கள் பூமியை நெருங்கிவரும்போது, அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன. அதன் விளைவாக, மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற அதிபயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி சீறிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு விமானத்தின் அளவிலான, பாறையாலான ‘2023 எப்இசட்3’ என்ற அந்த சிறியகோள், நாளை (6-ந்தேதி) பூமியை ‘நெருங்கி’ வருகிறது.

அச்சப்பட வேண்டாம். இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லப்போகிறது. பல லட்சம் கி.மீ. தூரம் என்றாலும், விண்வெளி பார்வையில் ‘அருகில்’ தான் (ரியல் எஸ்டேட்காரர்கள் ‘சென்னை மிக அருகில்’ என்று சொல்வது போல). அப்படி இந்த சிறுகோள் ‘கொஞ்சம்’ பக்கத்தில் வந்தாலும், ஆபத்தில்லை என்பதில் நாம் அமைதியடையலாம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.