;
Athirady Tamil News

கனடாவில் இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம் – இந்தியா கண்டனம்!!

0

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், கடந்த ஜனவரி 16-ம் தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரியவந்தது. கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.

இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு உள்ளன. ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் ஜனவரி மாத இறுதியில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு காணப்பட்டன. இதற்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நிலைமை சற்று சீரானது.

இந்நிலையில், கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்துக் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கோவிலின் வெளிப்புற சுவரின் மீது கருப்பு மை தெளித்து, இந்துவுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை வின்ட்சார் நகர போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சம்பவம் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் நடந்திருக்கக் கூடும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து வெளியான வீடியோவில், முழுவதும் கருப்பு உடையில், முகங்களை மூடியபடி 2 பேர் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தொலைவில் நின்றபடி யாரேனும் வருகிறார்களா என கவனித்தபடி நிற்கிறார். மற்றொருவர் சுவற்றில் கருப்பு மை கொண்டு எழுதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர். இந்து கோவில் அவமதிக்கப்பட்ட செயலுக்கு கனடாவில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.