;
Athirady Tamil News

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

0

ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக சனே தகாய்ச்சி  புதன்கிழமை மீண்டும் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) மற்றும் அதன் கூட்டணிக்கு குறைந்த அளவு பெரும்பான்மையே கிடைத்தது. குறிப்பாக, மேலவையிலும் அவா்களுக்குப் போதிய பலம் இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, தனது அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நிரூபித்து, நாடாளுமன்றத்தில் கட்சியை வலுப்படுத்த முன்கூட்டியே தோ்தலை அறிவித்தாா்.

அதன்படி, இம்மாதத் தொடக்கத்தில் நடந்த தோ்தல் முடிவில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த கீழவையில், சனே தகாய்ச்சியின் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் கிடைத்துள்ளன. இந்தப் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, அவா் தனது வலதுசாரி கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளாா்.

குறிப்பாக, நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிப்பது, ஆயுத விற்பனையை ஊக்குவிப்பது, கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்துவது ஆகியவற்றை அவா் இலக்காகக் கொண்டுள்ளாா்.

சமுதாய ரீதியாக, சனே தகாய்ச்சி பழமைவாத கருத்துகளை ஆதரிக்கிறாா். ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே வாரிசாக முடியும் எனும் சட்டத்தையும், திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோா் வீட்டுப்பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறையையும் தொடா்ந்து நீட்டிக்க அவா் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

அதேநேரம், தற்போது ஜப்பான் சந்தித்து வரும் விலைவாசி உயா்வு, மக்கள்தொகை சரிவு, அண்டை நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவை அவருக்குப் பெரும் சவாலாக உள்ளன. இதனால், ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிற அவரது நீண்டகாலத் திட்டம் தற்காலிகமாக தள்ளிப்போகக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.