;
Athirady Tamil News

சீனாவுக்கு பதிலடி கொடுக்க அருணாச்சலில் விவிபி திட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார்!!

0

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் ‘Vibrant Villages Program’ (விவிபி) திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 10) தொடங்கி வைக்கிறார்.

கடந்த 1951-ம் ஆண்டில் சீன ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது முதல் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. சீன அரசு, அருணாச்சல பிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீன அரசு புதிய பெயர்களை சூட்டியது. இந்த வரிசையில் கடந்த 4-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீன அரசு புதிய பெயர்களை சூட்டியது.

இதுகுறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. புதிய பெயர்களை சூட்டும் முயற்சியால் உண்மையை மாற்றிவிட முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த சூழலில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் துடிப்பான கிராமங்கள் (விவிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். இதன்படி அருணாச்சல பிரதேசத்தின் 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தவிர இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் விவிபி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக 2022 முதல் 2026-ம் ஆண்டு வரை ரூ.4,800 கோடி செலவிடப்பட உள்ளது.

சீனாவோடு 14 நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த 14 நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. அதோடு தென்சீனக் கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் திபெத் புத்த மதத்தினரின் மிக முக்கிய ஆன்மிக தலமான தவாங் புத்த மடாலயம் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் தவாங் புத்த மடாலயத்தில் இருந்து சீனாவுக்கு எதிரான திபெத் புரட்சி வெடிக்கக் கூடும் என்று சீன அரசு அஞ்சுகிறது.

அதோடு அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதி பூடான் எல்லையில் அமைந்திருக்கிறது. அருணாச்சல் பகுதிகளை சொந்த மாக்கினால் பூடானையும் எளிதாக ஆக்கிரமிக்கலாம் என சீனா கருதுகிறது. இதன்காரணமாகவே அருணாச்சல பிரதேச விவகாரத்தில் சீனா தொடர்ந்து பிரச்சினை எழுப்பிவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.