;
Athirady Tamil News

“டல்லான” ஹாலிவுட்.. உச்சம் தொட்ட கொரியன் படைப்புகள்! 2.5 பில்லியன் டாலரை கொட்டிய நெட்பிளிக்ஸ் – ஏன்? !!

0

தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து உள்ளது. ஹாலிவுட்டை விரைவில் முந்தும் என்று கூறப்படும் தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? விரிவாக பார்ப்போம். “ஸ்குவிட் கேம்.” விளையாட்டின் பெயரே மக்களை பதைபதைக்க வைத்த இந்த வெப் சீரிசை யாராலும் மறக்க முடியாது. கொரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்சில் வெளியாகி கொத்தவாச்சாவடி வரை சென்றடைந்தது. ஓடிடி என்றால் என்னவென்றே தெரியாத பலரை நெட்பிளிக்சுக்குள் இழுத்து சென்றது இந்த இணைய தொடர். நெட்பிளிக்சிலேயே அதிக நபர்களால் பார்க்கப்பட்ட இந்த வெப் சீரிஸின் அடுத்த பாகத்திற்காக பலரும் காத்திருக்கின்றனர். இதேபோல் All Of Us Are Dead, Extraordinary Attorney Woo. The Glory போன்ற வெப் சீரீஸ்களும் சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு பாராசைட் என்ற கொரிய திரைப்படம் சிறந்த பிக்சருக்கான ஆஸ்கர் விருதை வாங்கிய ஆங்கிலம் அல்லாத முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இப்படி கொரிய திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கே சவால்விடும் அளவுக்கு பொழுதுபோக்கு துறையில் மின்னத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக கொரியா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளிலும் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்களுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தென்கொரிய பொழுதுபோக்கு துறையில் அடுத்த 4 ஆண்டுகளில் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து இருக்கிறது. அங்கு ஏராளமான திரைப்படங்கள், இணைய தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இசை, விளையாட்டு என அனைத்து பொழுதுபோக்குகளிலும் நெட்பிளிக்ஸ் முதலீடு செய்கிறது.

இந்த நிலையில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கும் நெட்பிளிக்ஸ் சிஇஓ டெட் சரண்டாஸுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு முதலீடுகள் குறித்தும், கொரிய படைப்புகள் சர்வதேச அரங்கில் கொண்டு செல்வது குறித்து விவாதித்து உள்ளனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென் கொரிய அதிபர், நெட் பிளிக்ஸ் தைரியமான முடிவை எடுத்து உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார். இந்த முதலீடு என்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். இது வெறும் பொழுதுபோக்கு துறைக்கு மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.” என்றார். இதுகுறித்து பேசிய நெட்பிளிக்ஸ் சிஇஓ, சாரண்டாஸ், “தென் கொரியா உடனான நீண்ட கால வர்த்தக உறவை வலுப்படுத்தி உள்ளோம். கொரிய பொழுதுபோக்கு துறையின்மீது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எனவே இந்த முடிவை நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் எடுத்து இருக்கிறோம். தொடர்ந்து நல்ல கதைகளை நாங்கள் வழங்குவோம்.” என்றார்.

முன்பெல்லாம் சினிமா என்றால் தங்கள் உள்ளூர் மொழிப்படங்களை தொடர்ந்து, ஹாலிவுட்டில் வெளியாகும் ஆங்கில மற்றும் டப்பிங் திரைப்படங்களையே மக்கள் அதிகளவில் விரும்பி பார்ப்பார்கள். அஜித், விஜய் ரசிகர்கள் போட்டிபோல் டிசி, மார்வெல் ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதம் எல்லாம் ஏற்படும். ஆனால், ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு தென் கொரிய திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் ஹாலிவுட் படைப்புகளை விட அதிக வரவேற்பை பெற்று உள்ளது. அதேபோல் ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களும் தற்போது மக்கள் மனதில் அதிகம் ஒட்டவில்லை. அதே நேரம் கொரியா, இந்தியா, ஸ்பெயின், ப்ரெஞ்சு, ஈரான் போன்ற நாடுகளின் படைப்புகளுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பொழுதுபோக்கு துறையின் ஆதிக்கம் திரையரங்குகள், தொலைக்காட்சிகளிடம் இருந்து தற்போது ஓடிடி தளங்களின் கைகளுக்கு சென்றுகொண்டு இருக்கும் நிலையில், கொரிய பொழுதுபோக்கு துறை இதே வேகத்தில் சென்றால் ஹாலிவுட்டையே மிஞ்சும் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.