;
Athirady Tamil News

கருத்துக்கணிப்பு எதிரொலி: நாளை தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை!!

0

கர்நாடக சட்டசபைக்கு இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 37 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசியலில் நிலையற்ற தன்மை உண்டானது. காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால், 6 நாட்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஆபரேஷன் தாமரையால் 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்ததால், பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிவடைந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தல் முடிவு போலவே இந்த முறையும் தேர்தல் முடிவுகள் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதாவது தொங்கு சட்டசபை அமையும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய முடிவு வந்தால், கர்நாடகத்தில் மீண்டும் ஒரு முறை அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் நிலை உருவாகும். இந்த தெளிவற்ற கருத்து கணிப்புகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள், காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை. பா.ஜனதாவுக்கு ஆதரவாக கணிப்புகள் உள்ளன. எங்கள் கட்சி தொண்டர்கள் வழங்கியுள்ள தகவலின்படி, நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.

இதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று இது உங்களுக்கு தெரியும்’ என்றார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறும்போது, ‘நாங்கள் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கணக்கு போட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் தொண்டர்களிடம் பேசியுள்ளேன். அதனால் எங்கள் கட்சிக்கு குறைந்தது 115 இடங்கள் கிடைக்கும். நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம். இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்றார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள், ‘நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, ‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் ஏற்கனவே கூறியபடி காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க போகிறோம்’ என்றார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறும்போது, ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. ஒரு நிறுவனம், காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. நான் சொல்கிறேன், எங்கள் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும்.

இதில் எனக்கு சந்தேகம் இல்லை’ என்றார். இப்படி இரு கட்சிகளின் தலைவர்களும், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், எம்.எல்.ஏ.க்களுக்கு குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, நிலையற்ற தன்மை ஏற்படும். அத்தகைய நிலை மீண்டும் அமைந்துவிடுமோ என்று காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘தொங்கு சட்டசபை ஏற்படும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும்போது தெரிகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைய உறுதியான வாய்ப்பு உள்ளன. முதலில் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு எந்த கட்சிக்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் கிடைக்க போகிறது என்பது தெரியவரும்’ என்றார். காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சித்தராமையாவின் வீட்டில் கூடி தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத், தினேஷ் குண்டுராவ், சதீஸ் ஜார்கிகோளி, எச்.கே.பட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள், ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன செய்வது, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பதா? என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆழமாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியில் உள்ள 224 தொகுதிகளின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய தலைவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து அறிவுறுத்தினர். ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று பெங்களூருவில் இருந்தபடி, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை நடத்தினார். அப்போது, தொங்கு சட்டசபை அமைந்தால், குதிரை பேரம் நடத்த கட்சிகள் முயற்சி செய்யும் என்றும், அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வெற்றி பெற்றவுடன் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தேர்தலில் எப்படியும் பா.ஜனதா பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் தேர்தல் முடிவு எப்படி வருகிறது என்பதை அறிந்தே கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.