“டச் பண்ணாதீங்க”.. அவசரப்பட்டு “அதை” மட்டும் தொட்டுடாதீங்க.. போலீசார் வார்னிங்.. உஷார் மக்களே உஷார்!!
லட்சம் முதல் கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி கும்பலிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவிகள்.. இதற்காகவே, முக்கிய வார்னிங் ஒன்றை போலீசார் விடுத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாகவே சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து வருகிறார்கள்.. வாட்ஸ்அப் மூலம் நிறைய மோசடிகள் நடப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லியுள்ளனர்.
வியட்நாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்கள், வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர். இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன.
ஜாக்கிரதை: எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும்.. வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள்.. அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஃபோன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும்” என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேபோல ஆன்லைன் மோசடிகள் என்று தனியாக ஒரு ரகம் உண்டு.. இது எப்படி என்றால், “உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது, அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும்” என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு, மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம்..
ஆசை ஆசையாய்: அதேபோல, சில லிங்க்குகளை அனுப்பி, அதனை கிளிக் செய்தால் “உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும்” என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது.. இதைவிர இன்னொரு மோசடியும் உள்ளது.. அதன்படி, “உங்களுக்கு சில லட்சங்கள் பரிசு கூப்பன் விழுந்துள்ளது, அதனை நீங்கள் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் நாங்கள் சொல்லும் லிங்க்கில் சென்று குறிப்பிட்ட பணத்தை கட்டுங்கள்” என்று சொல்வார்கள்… இப்படி தினுசு தினுசாக லிங்குகளை அனுப்பி பணத்தை சுருட்டும் கும்பல்கள் அதிகம் உண்டு.. இவர்களை நம்பி, லட்சம் முதல் கோடி வரை பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போன நபர்களும் உண்டு.
இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்து போயிருக்கிறார்களாம். புகார் கொடுக்காமலேயே பலர் புழுங்கி கொண்டிருப்பதாகவும் போலீசார் சொல்கிறார்கள்.. ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரூ.30 லட்சம் பணத்தை இழந்திருக்கிறாராம்.. ஒரு தொழிலதிபர் ரூ.1.2 கோடியையும் இழந்துள்ளராம்.. இது தொடர்பாகவே, போலீசார் முக்கிய எச்சரிக்கை ஒன்றை தற்போது விடுத்துள்ளனர்.
சின்ன மீன் பெரிய மீன்: “சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதே இந்த மோசடிக்கும்பலின் டிரிக் ஆகும்.. புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து காத்திருக்கிறது.. யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள்.
பிறகு தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக சொல்லி, அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து, வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி, அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள். இதுக்கெல்லாம் ஒரே வழி, தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்” என்று எச்சரித்துள்ளனர்.