;
Athirady Tamil News

யார் பேச்சையும் கேட்க முடியாது.. உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி ஏவப்படும்.. வடகொரியா அடாவடி!!

0

ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று வடகொரியா தெரிவித்துள்ளது. மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் வடகொரியா தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது. ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. எனினும், தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது. ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.