ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அவாமி லீக் கட்சியின் தலைவர் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வங்கதேசத்திலிருந்து வெளியேறினார்.
இந்தியாவுக்குத் தப்பிய ஷேக் ஹசீனா, தில்லியில் உள்ள ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணவர்களின் போராட்டங்களின்போது நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில், வெகுஜன போராட்டத்தை கலைக்க ஹசீனா குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு முதல்முறையாக அவருக்கு எதிரான வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.