முதலில் தேர்தலை நடாத்துங்கள் !!
ஐக்கிய மக்கள் சக்தியை அரசாங்கத்துடன் இணைய ஜனாதிபதி அழைப்பு விடுத்தததையடுத்து, முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
”மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள முதலில் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என நாங்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். மக்களின் புதிய ஆணையைத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அவரை ஆதரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம்” என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி எம்மைத் தம்முடன் பணியாற்றுமாறு அழைத்தார். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர் தவறான நபர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான பொதுஜன பெரமுனவுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். நாம் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதைத் தடுக்கும் மூல காரணம் அதுதான்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை சமீபத்தில் ஜனாதிபதி சட்ட மாநாட்டில் தெரிவித்த சில கருத்துகளை நாங்கள் வரவேற்கவில்லை.
மக்கள் தேர்தல் தொடர்பில் அலுப்படைந்திருப்பதாகவும் எதிர்காலத் தேர்தல்களில் எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் கூறினார்.
நாட்டின் தேர்தல் செயற்பாட்டுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்ட முயற்சிக்கிறார் என நாங்கள் நினைக்கின்றோம் என திஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செய்யக்கூடிய பொருத்தமான செயல் என்னவென்றால் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளப் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி மக்கள் பொதுத் தேர்தலை பிற்போடுவது குறித்து என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அதன்படி செயற்படுவது தான்.
இதேவேளை, நிலுவையில் உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருக்கலாம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.