;
Athirady Tamil News

நேர்மறையான சமூக தளமாக டுவிட்டரை மாற்றியுள்ளேன்: எலான் மஸ்க்!!

0

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகத்தில் பல அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளம் இதற்கு முன்பு சிவில் சமூகத்தின் மீது ஒரு அரிக்கும் தன்மை உடைய தீங்கை விளைவிப்பதாக இருந்தது. அதனை தம்மால் மாற்றி, மனிதகுலத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாக அதனை செயல்பட வைக்க முடியும் என தான் நம்பியதாக கூறினார்.

கிட்டத்தட்ட 4000 பேர் குழுமியிருந்த விவா-டெக் கருத்தரங்கத்தில் பல விஷயங்கள் குறித்து பேசிய மஸ்க், மேலும் கூறியதாவது:- தொடர்ந்து டுவிட்டர் உபயோகப்படுத்தும் பயனாளிகள் அந்த தளம் பயன்படுத்தும்போது கிடைக்கும் அனுபவம் மேம்பட்டிருப்பதை உணர முடியும். இதுவரை இல்லாத அளவிற்கு டுவிட்டரின் பயன்பாடு மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், விளம்பரதாரர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோவின் திறமையின் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது. விலகிச் சென்ற விளம்பரதாரர்களில் பெரும்பாலானோர் பெருமளவில் திரும்ப வந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அது ஆபத்தாக மாறலாம். டிஜிட்டல் அதிநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விளைவுகள் நேர்மறையானவைதான் என்றாலும் இதனால் மக்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் பேராபத்தும் நிச்சயம் உள்ளது. தனது நியுராலிங்க் கார்பரேசன் இந்த வருடத்தில், முதல் மனித உள்வைப்பு செயல்முறையில் அந்நிறுவனம் ஈடுபடும். அதன் முன்னேற்றம் தாமதமாக இருந்தாலும் அதன் நோக்கம் மனித உடல் உறுப்புகளில் செயல்பாடு இழந்தவர்களுக்கு முழுவதுமாக அதனை மீட்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார். எலான் மஸ்கிடம் இருந்து முதல் பணக்காரரர் என்ற பெருமையை குறுகிய காலத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பெற்றிருந்தார். அவரை சந்தித்ததுடன் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் அவரிடமிருந்து மீண்டும் அந்த பட்டத்தை மீட்டெடுத்தார் மஸ்க் எனபது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தனது நாட்டில் எலான் மஸ்க் ஒரு தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இப்பின்னணியில் இருவரும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.