;
Athirady Tamil News

‘மோடி மோடி’ வாழ்த்து கோஷங்களுடன் அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி!!

0

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடக்கும் யோகா கொண்டாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். மற்றவர்களுடன் சேர்ந்து யோகா செய்கிறார். 22-ந் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், ஜோ பைடனும், ஜில் பைடனும் விருந்து அளிக்கிறார்கள். ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதே நாளில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 23-ந் தேதி, வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி பேசுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை எதிர்பார்த்து, அமெரிக்காவில் வாழ்த்து கோஷங்கள் எழும்ப தொடங்கி விட்டன. தலைநகர் வாஷிங்டனிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள தேசிய நினைவுச்சின்னம் அருகே குவிந்தனர். ‘மோடி மோடி’ என்றும், அமெரிக்க-இந்திய நட்புறவை வலியுறுத்தியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கையில் இந்திய தேசிய கொடிகளையும், மோடி உருவப்படம் பொறித்த பதாகைகளையும் பிடித்திருந்தனர். ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் நோக்கி ஆட்டம் பாட்டத்துடன் பேரணியாக சென்றனர்.

அங்கு உற்சாகமாக ஆடிப்பாடினர். இந்தியர்களின் ஒற்றுமையை தெரிவிக்கவும், பிரதமர் மோடியை வரவேற்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இதுபோல், ஹூஸ்டன் நகரில், புகழ்பெற்ற சுகர்லேண்ட் நினைவு பூங்காவில் ஏராளமான அமெரிக்க இந்தியர்கள், தேசிய கொடியுடன் திரண்டனர். பாஸ்டன், சிகாகோ, அட்லாண்டா, மியாமி, தம்பா, டல்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சாக்ரமென்டோ, சான் பிரான்சிஸ்கோ, கொலம்பஸ், செயின்ட் லூயிஸ் போன்ற 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமெரிக்க இந்தியர்கள் ஊர்லவம் சென்றனர். நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்திலும், சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்திலும் இதேபோன்ற ஆர்ப்பரிப்புடன் இந்தியர்கள் குவிந்தனர். இதுபோல், பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை காண்பதற்கான டிக்கெட்டுகளை பெற அமெரிக்க இந்தியர்கள் முட்டி மோதுகிறார்கள். 22-ந் தேதி, வெள்ளை மாளிகையில் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகை வளாகத்தில் நுழைய வாழ்நாளில் ஒருமுறையாக கிடைத்துள்ள வாய்ப்பை அனுபவிக்கும் வகையில், அதற்கான டிக்கெட் பெற இந்தியர்களிடையே போட்டா போட்டி நடக்கிறது.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் மோடி உரையாற்றுவதை காணவும் டிக்கெட் பெற போராடி வருகிறார்கள். செனட் உறுப்பினர்களும், எம்.பி.க்களும் தலா ஒரு டிக்கெட்டை மற்றவருக்கு அளிக்கலாம். அந்த டிக்கெட்டை யாருக்கு தருவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள். வாஷிங்டனில் ரொனால்டு ரீகன் மையத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே மோடி பேசும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அந்த டிக்கெட்டுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. பிரதமருக்கு ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. அந்த பட்டியலை ஜில் பைடன் அலுவலகம் வெளியிடவில்லை. இருப்பினும், சுமார் 400 பேர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அமெரிக்கவாழ் இந்திய எம்.பி.க்கள் அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், ரோ கன்னா, ஸ்ரீ தானேடர் ஆகியோருக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னணி அமெரிக்க இந்திய தொழில் அதிபர்கள் சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை, ராஜ் சுப்பிரமணியம், ஜோ பைடன் நிர்வாகத்தில் பணியாற்றும் இந்தியர்களான நீரா தாண்டன், விவேக் மூர்த்தி, ராகுல் குப்தா ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி வருகையால் அமெரிக்காவில் திருவிழா போன்ற உற்சாகம் களைகட்டுகிறது. இதுகுறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய துணை தூதர் அசீம் மகாஜன் கூறியதாவது:- பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க வருகை குறித்து அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. எம்.பி.க்கள், பெரும் தொழில் அதிபர்கள், இந்திய அமைப்புகள் ஆகியோரிடம் இருந்து தினந்தோறும் எங்களுக்கு வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியதாவது:- மோடி நிகழ்ச்சிகளை காண நியூயார்க் மற்றும் வாஷிங்டனுக்கு பறக்க இந்தியர்கள் தயாராகி வருகிறார்கள். 20 நகரங்களில் நடந்த பேரணியும், டிக்கெட்டுகளை பெற நிலவும் ஆர்வமும் அமெரிக்காவில் மோடியின் பிரபலத்தை காட்டுகிறது. அவர் பிரதமராக பதவி ஏற்ற 9 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த ஆர்வம் குறையவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.