;
Athirady Tamil News

டைட்டன் நீர்மூழ்கியில் உயிரிழந்த பாகிஸ்தான் தொழிலதிபர் தாவூத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? !!

0

அகமது தாவூத் என்ற ஆதரவற்ற இளைஞன் ஒரு ஸ்டூலில் துணிகளைத் தொங்கவிட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து தாவூத் குடும்பத்தின் வியாபாரம் தொடங்கியது. பின்னர் மும்பையில் (அப்போது பாம்பே) ஒரு நூல் (yarn) கடையை அவர் திறந்தார்.

தாவூத் குடும்பத்தின் பெயர் கடந்த சில நாட்களாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் செய்தி ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த 5 பயணிகளில் இருவர் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக்காரணம்.

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலின் சிதைவுகளைக் காண்பதற்காக கடலின் அடிப்பகுதிக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியில் ஷெஹஸாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் ஆகியோர் இருந்தனர்.

நீரின் அழுத்தம் காரணமாக, நீர்மூழ்கியில் வெடிப்பு ஏற்பட்டு அதில் இருந்த ஐந்து பயணிகளும் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாவூத் குடும்பம் பாகிஸ்தானின் மிகப்பெரிய செல்வந்த குடும்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஷெஹஸாதா தாவூத் எங்ரோ கார்பரேஷனின் துணைத் தலைவராக இருந்தார். இந்த நிறுவனம் உரம், உணவுப்பொருட்கள் மற்றும் எரிசக்தி துறையில் செயல்படுகிறது.

தாவூத் குடும்பத்தின் வியாபாரம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விரிவாகப்பரவியுள்ளது. இது தவிர இந்தக்குடும்பம் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அகமது தாவூத், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபாதை ஜவுளிக்கடை மற்றும் பம்பாயில் ஒரு நூல் கடையுடன் தாவூத் குடும்ப வணிகத்தை தொடங்கினார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான தாவூத் குடும்பம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிறிய இடத்தில் இருந்து வியாபாரத்தை ஆரம்பித்தது, சில தசாப்தங்களுக்குள் இந்தக்குடும்பம் அப்பகுதியில் உள்ள பெரிய செல்வந்த குடும்பங்களில் ஒன்றாக ஆனது.

இன்று இந்த குடும்பம் டஜன் கணக்கான தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களை கவனித்து வருகின்றது. பாகிஸ்தானில் இருந்து பிரிட்டன் வரை அவர்களது தொழில் பரவியுள்ளது.

தாவூத் குடும்பத்தின் தலைவரான அகமது தாவூத், 1905 ஆம் ஆண்டு அப்போதைய காட்டியாவார் மாகாணத்தின் பாண்ட்வா பகுதியில் பிறந்தார். இந்த நகரம் இப்போது இந்தியாவின் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ளது.

அவரது தந்தை ஒரு வியாபாரி. அகமது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அவரது தந்தை குழந்தை பருவத்தில் இறந்துவிட்டார், அதன் பிறகு அவர் தனது தாத்தாவால் வளர்க்கப்பட்டார்.

“தனது 16வது வயதில் தாவூத், நடைபாதையில் துணிகளை விற்று தனது தொழிலைத் தொடங்கினார்,” என்று ‘அஹ்மத் தாவூத் ஏக் பாக்கர்-இ-அவுசாஃப்’ (அஹ்மத் தாவூத்: எல்லா நல்லொழுக்கங்களும் உடையவர்) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் உஸ்மான் பாட்லிவாலா எழுதியுள்ளார்.

ஆதரவற்ற இளைஞர் அகமது தாவூத் 1920 இல் மும்பையில் நூல் கடை ஒன்றைத் திறந்தார் என்று தாவூத் முதலீட்டு நிறுவனத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

”தனது தாயார் திறமையான மற்றும் புத்திசாலி பெண்மணி என்று சேட் அகமது கூறுவார். அவர் தன் குழந்தைகளை ஊக்கப்படுத்தினார். அதன் காரணமாக அவர்களுக்கு முன்னேற தைரியம் பிறந்தது,” என்று அகமது தாவூத்தை பலமுறை சந்தித்துள்ள உஸ்மான் பாட்லிவாலா கூறுகிறார்.

அவர் ஒரு பருத்தி ஜின்னிங் தொழிற்சாலையுடன் கூடவே ஒரு எண்ணெய் ஆலை மற்றும் ஒரு தாவர எண்ணெய் தொழிற்சாலை ஆகியவற்றையும் நிறுவினார்.

மேலும் சிறிது காலத்திற்குள் தாவூத், குடும்ப அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கிளைகளை கல்கத்தா(கொல்கத்தா), மெட்ராஸ் (சென்னை), கான்பூர், மதுரா, லூதியானா மற்றும் டெல்லி போன்ற இடங்களில் நிறுவினார் என்று மேமன் சமூகத்தைப் பற்றிய புத்தகத்தை எழுதிய உமர் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமையல் எண்ணெய் தொழிற்சாலையை நிறுவியபோது, அவரது வணிகம் செழித்து வெற்றிகரமாக இயங்கியது என்று உஸ்மான் எழுதியுள்ளார். இவரது சகோதரர்களான சுலைமான் தாவூத்,அலி முகமது தாவூத், சித்திக் தாவூத் மற்றும் சத்தார் தாவூத் ஆகியோரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர்.

துணைக் கண்டம் பிரிந்து பாகிஸ்தான் உருவான பிறகு அவர் பிரிட்டனுக்குச் சென்றார். அங்கு அவர் சில காலம் வாழ்ந்தார். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுவிட்டார். மான்செஸ்டர் மற்றும் பாகிஸ்தானில் தாவூத் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை அமைத்தார்.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியாளர்களின் ஆரம்ப காலம் மற்றும் தாவூத் குடும்பம்

1971ல் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்தது. தாவூத் குடும்பத்தின் பல தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களை அது பாதித்தது. கர்ணஃபுலி காகித ஆலை அவற்றில் ஒன்று.

ஃபீல்ட் மார்ஷல் அயூப் கான் அல்லது ஜெனரல் ஜியாவுல் ஹக் என்று யாருடைய சகாப்தமாக இருந்தாலும், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி தாவூத் குடும்பத்திற்கு சாதகமாகவே இருந்து வந்தது.

அகமது தாவூத் பாகிஸ்தானில் பருத்தி தரகுத் தொழிலை தொடங்கியதாக உஸ்மான் பாட்லிவாலா எழுதியுள்ளார்.

அயூப் கான் ஆட்சிக் காலத்தில் கராச்சி மற்றும் போரேவாலாவில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகள் மோசமான நிலையில் இருந்தன.

இந்தத் தொழிற்சாலைகள் பாகிஸ்தான் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (PIDC) கீழ் இருந்தன. ஆயினும் அவை சரிவர இயங்காமல் இருந்தன.

இந்த தொழிற்சாலைகளை அகமது தாவூத்துக்கு கொடுத்தால் அவை நன்றாக இயங்கும் என்று அயூப்கானுக்கு யோசனை கூறப்பட்டது. இவை அவருக்கு வழங்கப்பட்டபோது, அவரும் அவரது சகோதரர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

தற்போதைய தனியார்மயமாக்கல் நடவடிக்கையின்போது செய்யப்படுவதைப்போல அப்போது இந்தப் பணிக்கான ஏலம் எதுவும் நடத்தப்படவில்லை என்று புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கான தொகையை அவர்கள் செலுத்தினர்.

முன்னதாக அவர் லாண்டியில் (கராச்சி) தாவூத் பருத்தி ஆலையை வைத்திருந்தார். அது 1952 முதல் செயல்பட்டு வந்தது.

மேற்கு பாகிஸ்தானுக்குப் பிறகு அவர் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க கிழக்கு பாகிஸ்தானுக்கும் (வங்கதேசம்) சென்றார்.

இந்த வாய்ப்பும் அயூப்கானின் ஆட்சியில் வந்தது. தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் பிற பிரச்னைகள் காரணமாக அங்கு கரண்ஃபுலி காகித ஆலை மற்றும் கரண்ஃபுலி ஜவுளி ஆலை, மோசமான நிலையில் இருந்தன.

”கலாபாக் நவாப் இவற்றை வாங்கிக்கொள்ளுமாறு சேட் அகமதுவிடம் சொன்னார். அவர் அதை ஏற்றுக்கொண்டு கடினமாக உழைத்தார். அந்த ஆலைகள் நன்றாக செயல்படத்தொடங்கின,”என்று உஸ்மான் பாட்லிவாலா குறிப்பிடுகிறார்.

அந்த நேரத்தில் பாகிஸ்தானில் மூங்கிலில் இருந்து காகிதம் தயாரிக்கும் ஒரே காகித ஆலையாக அது இருந்தது.

1969 ஜனவரி 17 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ், அகமது தாவூத் குடும்பத்தை பாகிஸ்தானின் இரண்டாவது பணக்கார குடும்பம் என்று விவரித்தது, அந்த நேரத்தில் அவருடைய சொத்து மதிப்பு 20 கோடி டாலர்கள்.

பருத்தி, கம்பளி, ஜவுளி, நூல், ரசாயனங்கள், சுரங்கம், வங்கி, காப்பீடு, காகிதம் மற்றும் உர தொழிற்சாலைகள் அப்போது அவரிடம் இருந்தன.

1971 இல் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததால், கர்ணஃபுலி காகித ஆலை, தாவூத் சுரங்கம் மற்றும் தாவூத் ஷிப்பிங் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்பட்டன. அந்த நாட்களில் அவருக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக உஸ்மான் பாட்லிவாலா கூறுகிறார்.
‘பாகிஸ்தானின் பெரும் செல்வந்தர்கள்’ 22 குடும்பங்கள் மற்றும் தாவூத் குடும்பம்

ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா-உல்-ஹக்குடன் அகமது தாவூத் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.

பாகிஸ்தானின் 60 முதல் 80 சதவிகித சொத்துக்களை 22 குடும்பங்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அயூப் கான் ஆட்சியின் போது டாக்டர் மஹ்புபுல் ஹக், பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த குடும்பங்களின் பெயர்களை அவர் கூறவில்லை.

ஆனால் இந்த ரகசியத்தின் வெளிப்பாடு ஒரு எதிர்ப்புக் குரலை உருவாக்கியது. பாகிஸ்தானின் அவாமி கவிஞர் ஹபீப் ஃஜாலிப் பின்வருமாறு எழுதினார்:

’இருபது குடும்பங்கள் தழைக்கின்றன, கோடிக்கணக்கானோர் அழுகின்றனர்

நம்மீது இன்னும் தொடர்கிறது முடிவில்லா கருப்பு யுகங்களின் அட்டுழியங்கள்

வாழ்க ஆயூப்’

சுல்ஃபிகர் அலி புட்டோ சோஷியலிசம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்ததும் அந்தக் குடும்பங்களைக் குறி வைத்தார். இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு மூலதனம் தேவை, எனவே இந்தக் குடும்பங்கள் தங்கள் மூலதனத்தை நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும், இல்லையெனில் அவர்களை கைது செய்வோம் என்று அவர் எச்சரித்தார்.

பின்னர் தாவூத் குடும்பம் உட்பட பல குடும்பங்களின் சொத்துக்களை நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் அதாவது அவற்றை தேசியமயமாக்கினார்.

அந்த 22 குடும்பங்களில் 14. மேமன் சமூகத்தை சேர்ந்தவை. தாவூத் குடும்பம் வரிசையில் இரண்டாவதாக இருந்தது என்று உஸ்மான் பாட்லிவாலா குறிப்பிடுகிறார்.

இதையடுத்து தாவூத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் விடுதலையானவுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். அப்போது அவருக்கு ‘இரண்டு பில்லியன் ரூபாய் நஷ்டம்’ ஏற்பட்டது.

அகமது தாவூத் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனத்துடன் கூட்டாக தொழிலை துவங்கினார். அவர் ஒரு இடத்தில் துளையிட்டபோது அங்கிருந்து கச்சா எண்ணெய் வெளியே வந்தது.

புட்டோவின் அரசை அகற்றி ஜெனரல் ஜியா-உல் ஹக் பாகிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அகமது தாவூத்தின் நல்ல நாட்கள் மீண்டும் திரும்பின.

ஜெனரல் ஜியா-உல் ஹக்கின் ஆட்சியின் போது, அகமது தாவூத் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தார். அவரது தொழில்கள் மற்றும் மூலதன முதலீடு மீண்டும் தொடங்கியது. ஜெனரல் ஜியா உல் ஹக்குடன் அகமது தாவூத் நல்ல உறவை கொண்டிருந்தார்.

இதுபோன்ற 20 திட்டங்களை அவர் தனது வாழ்நாளிலேயே சகோதரர்களான சுலேமான் தாவூத், அலி முகமது தாவூத், சித்திக் தாவூத் மற்றும் சத்தார் தாவூத் ஆகியோருக்கு விநியோகித்தார். அவர்கள் ஒவ்வொருவரின் பங்கிலும் வந்த தொழிலை அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர் என்று உஸ்மான் பாட்லிவாலா தெரிவிக்கிறார்.

தாவூத் அறக்கட்டளையின் தலைவராக அகமது தாவூத்தின் மகன் ஹுசைன் தாவூத் தற்போது உள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தாவூத் குடும்பத்தின் மற்றொரு பிரபலமான பெயர் ரசாக் தாவூத். இவர் முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக்காலத்திலும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசிலும் வர்த்தக ஆலோசகராக இருந்தார்.

ரசாக் தாவூத், அகமது தாவூதின் சகோதரரான சுலைமான் தாவூதின் மகன். டிஸ்கான் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ரசாக் தாவூத்.

மறுபுறம் ஷெஹஸாதா தாவூத்தின் தந்தை ஹுசைன் தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர், எங்ரோ காப்ரேஷன் மற்றும் தாவூத் ஹெர்குலிஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் உரிமையாளர்கள்.

டைட்டன் விபத்தில் உயிரிழந்த ஷெஹஸாதா தாவூத், எங்ரோவின் துணைத் தலைவராக இருந்தார்.

டைட்டன் விபத்தில் ஷெஹஸாதா தாவூத் உயிரிழந்தார். அவர் எங்ரோ காப்ரேஷனின் துணைத் தலைவராக இருந்தார்.

எங்ரோ காப்ரேஷன் 1965 இல் நிறுவப்பட்டது என்று வணிக நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் மதிப்பீட்டில் பணிபுரியும் ஒரு அமைப்பான பாக்கிஸ்தான் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்ஸி (பாக்ரா) தெரிவிக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அதன் பெயர் ஈசோ பாகிஸ்தான் உர நிறுவனம்.

வெளிநாட்டு கூட்டாளிகள் வெளியேறிய பிறகு, அது எங்ரோ கெமிக்கல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அது உரத்துறையில் பணியாற்றி வந்தது. மற்ற துறைகளில் இணைந்த பிறகு அதற்கு எங்ரோ காப்ரேஷன் என பெயரிடப்பட்டது. அதன் கீழ் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பணிபுரிகின்றன.

எங்ரோ காப்ரேஷன் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். அதன் பெரும்பாலான பங்குகள் தாவூத்தின் குடும்ப நிறுவனங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் உள்ளன. ஷெஹஸாதா தாவூத் எங்ரோ காப்ரேஷனின் துணைத் தலைவராகவும், அவரது தந்தை ஹுசைன் தாவூத் அதன் தலைவராகவும் இருந்தனர். ஷெஹஸாதா தாவூத்தின் சகோதரர் சமத் தாவூத் இதன் இயக்குனர்.

ஹுசைன் தாவூத் மற்றும் அவரது குடும்பத்தின் இரண்டாவது பெரிய நிறுவனம் தாவூத் ஹெர்குலிஸ் கார்ப்பரேஷன் ஆகும். அதன் பங்குகள் தாவூத் கார்ப்பரேஷனிலும் உள்ளன.

ஹுசைன் தாவூத், தாவூத் ஹெர்குலிஸ் கார்ப்பரேஷனின் தலைவராகவும், அவரது மகன் சமத் தாவூத் அதன் துணைத் தலைவராகவும், ஷெஹஸாதா தாவூத் அதன் இயக்குநராகவும் இருந்தார்.

ஹுசைன் தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களான எங்ரோ காப்ரேஷன் மற்றும் தாவூத் ஹெர்குலிஸ் காப்ரேஷன் ஆகியவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக இருந்தாலும் இதில் சாதாரண மக்களைத் தவிர, நிறுவனங்களுக்கும் பங்குகள் உள்ளன. ஆனால் அவற்றின் பெரும்பாலான பங்குகள் தாவூத் குடும்பத்திடம் உள்ளன.

எங்ரோ கார்ப்பரேஷன் நிர்வாகக்குழுவில், ஸ்பான்சர் செய்யும் குடும்பம் அதாவது தாவூத் குடும்பத்தின் அதிகபட்ச உறுப்பினர்கள் உள்ளனர் என்று ‘பாக்ரா’ தெரிவிக்கிறது.

தாவூத் குடும்பத்தின் ஆர்வம் அறிவியல், சமூகப் பணி போன்றவற்றிலும் உள்ளது.

ஹுசைன் தாவூத் மற்றும் அவரது குழந்தைகள் தாவூத் ஹெர்குலிஸ் காப்ரேஷன் மற்றும் எங்ரோ காப்ரேஷன் ஆகியவற்றில் அதிகபட்ச பங்குகளை வைத்துள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றன.

இந்தக் குழுமம் தனது பல்வேறு துணை நிறுவனங்கள் மற்றும் தன் கீழ் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் மூலதனத்தை முதலீடு செய்கிறது என்று தாவூத் ஹெர்குலிஸ் குழுமத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணமாக எங்ரோ உரங்களில், எங்ரோ காப்ரேஷனின் 56 சதவிகித பங்குகள் உள்ளன.

2022 முதல் இப்போது வரை இந்த குழுமம், எரியாற்றல், உணவு மற்றும் விவசாயம், பெட்ரோ கெமிக்கல், ரசாயன சேமிப்பு, புதுப்பிக்கவல்ல எரியாற்றல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஏழு பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

’எங்ரோ எக்சிம் அக்ரி’யில் காப்ரேஷன் 100% பங்குகளைக் கொண்டுள்ளது. இது எங்ரோ எனர்ஜி டெர்மினலில் 56 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது, அதே சமயம் எங்ரோ எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் 100 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது.

ஹுசைன் தாவூத்தின் குடும்ப நிறுவனமான எங்ரோ காப்ரேஷன், சிந்து அரசின் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.

எங்ரோ கார்ப்பரேஷன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி அதன் மொத்த சொத்து சுமார் 750 பில்லியன் ரூபாய்.

முழு ஆண்டில் அது 46 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது என்று எங்ரோ காப்ரேஷனின் 2022ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. 2022 இல் தாவூத் ஹெர்குலிஸ் கார்ப்பரேஷனின் லாபம் மூன்றரை பில்லியன் ரூபாய்க்கும் மேல் என்று அந்த நிறுவனத்தின் வருடாந்திர நிதி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாவூத் ஹெர்குலிஸ் காப்ரேஷன் பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை தருகிறது என்று ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. மறுபுறம் எங்ரோ காப்ரேஷனின் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில் சமூக நலத்துறைகளில் 84 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக எங்ரோ கார்ப்பரேஷன் தெரிவிக்கிறது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவை அதில் அடங்கும்.

2022 இல் அரசுக்கு 29.5 கோடி டாலர் வரி செலுத்தியதாக கார்ப்பரேஷன் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் அதன் துணை நிறுவனமான எங்ரோ எனர்ஜி, பாகிஸ்தானில் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியது.

தாவூத் குழுமத்திற்கு சொந்தமான எங்ரோ கார்ப்பரேஷனின் செயல்பாடு தொடர்ந்து சிறப்பாக உள்ளது. அதன் நீண்ட கால செயல்திறன் பிளஸ் AA ஆகும் என்று பாகிஸ்தான் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்ஸி தெரிவித்தது.
கல்வி, அறிவியல் மற்றும் சுகாதாரத் துறையில் தாவூத் குடும்பத்தின் சேவைகள்

தாவூத் அறக்கட்டளை 1961 இல் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டது. இது ஜெனரல் அயூப் கானால் திறக்கப்பட்டது. தாவூத் குடும்பம் கல்வித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தியது.

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மைசூர் நகரில் பள்ளி கட்டடம் ஒன்றையும், போரேவாலாவில் உள்ள அரசு கல்லூரியில் அறிவியல் கட்டிடத்தையும், கராச்சியின் கிராமப்புற பகுதியான தர்சானு சன்னுவில் பள்ளியையும் கட்டியிருப்பதாக அறக்கட்டளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேட் அகமது தாவூத் கூறினார்.

தாவூத் அறக்கட்டளை 1962 இல் கராச்சியில் தாவூத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவியது, இது பாகிஸ்தானில் தனியார் துறையில் முதல் தொழில்முறை பொறியியல் கல்லூரியாகும். இங்கு வேதியியல் பொறியியல், உலோகவியல் மற்றும் மெட்டீரியல் இஞ்சினியரிங் ஆகிய துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது.

பின்னர் சுல்ஃபிகர் அலி புட்டோ ஆட்சியின்போது அது தேசியமயமாக்கப்பட்டு அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் வந்தது.

இவான் கானின் அமெரிக்க சுற்றுப்பயணம்: அகமது தாவூத் மற்றும் அமெரிக்க அதிபர் ஐசனோவர்.

1983 ஆம் ஆண்டில் கராச்சியில் அகமது தாவூத் பெண்கள் பொதுப் பள்ளியின் அடிக்கல் நாட்டப்பட்டது. இது இன்னும் அறக்கட்டளையின் கீழ் உள்ளது. அங்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கல்வி கற்று வருகின்றனர். இது தவிர, ‘எல்எம்எஸ்’ (லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்) மற்றும் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியவை தாவூத் குடும்பத்தின் பெயரில் வணிககல்வி அமைப்புகளை நடத்தி வருகின்றன.

1991 இல் கராச்சியில் நிறுவப்பட்ட பாகிஸ்தானின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனையான சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கழகத்திலும் தாவூத் குடும்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

”பஷீர் தாவூத் இங்கு பல கோடி ரூபாய் உதவி செய்துள்ளார். அதன் மூலம் மூன்று பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு குழந்தைகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர, டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான இயந்திரங்கள் வாங்குவதற்கும் உதவி வழங்கப்படுகிறது,” என்று இந்த கழகத்தில் பணிபுரியும் டாக்டர் கௌஹர் கூறினார்.

தாவூத் அறக்கட்டளை கராச்சியில் டிடிஎஃப் (The Dawood Foundation) வீட்டை உருவாக்கியது. 1930 களில் கட்டப்பட்ட இந்த வீட்டில், மரச்சாமான்கள் மற்றும் கிராமபோன்கள் உட்பட கராச்சியின் வரலாறு தொடர்பான பிற பொருட்கள் உள்ளன. மேலும் பாகிஸ்தானின் நிறுவகர் முகமது அலி ஜின்னாவின் கல்லறையையும் இங்கிருந்து பார்க்கமுடியும்.

டிடிஎஃப் வீடு, கராச்சியின் கலாசார வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த, நடுத்தர வர்க்கத்தினருக்கான முதல் கூட்டுறவு சங்கமான, ஜாம்ஷெட் சொஸைட்டியில் அமைந்துள்ளது.

இந்த சொஸைட்டி 1920 இல் ஜாம்ஷெட் நஸ்ரவான்ஜி (டாடா) அவர்களால் நிறுவப்பட்டது. முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் யூதர்கள் இங்கு ஒன்றாக வாழ்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.