;
Athirady Tamil News

சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு 5-ந்தேதி நடக்கிறது!!

0

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில் உள்ள சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது. அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் கண்கொள்ளா காட்சி இங்கே நிகழ்கிறது.

இந்த அற்புத காட்சியை காண தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை மனமுருகி தரிசித்து செல்வார்கள். தேவலோகத்தில் உள்ள காமதேனு பசு, தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிட இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கி அருள் பெற்றதாகவும், பின்னர் தனது பாலினால் திருக்குளம் அமைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. வசிஷ்ட முனிவர் அந்த பாலில் வெண்ணையை எடுத்து சிவலிங்கம் ஆக்கி பூஜை செய்ததாகவும், பூஜை முடிந்து அதை எடுக்க முயன்ற போது பூமியிலேயே சிக்கி சிவலிங்கமாக உருபெற்றதால் இவ்வூருக்கு சிக்கல் என்றும், சாமிக்கு வெண்ணை பிரான் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் வரக் காரணமாகியது என்பது நம்பிக்கை ஆகும். சிவன் மற்றும் பெருமாள் இருவரும் அருகருகே ஒரே ஆலயத்தில் அமைந்து அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பாகும்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனி சன்னதி, ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள், உள்பிரகார மண்டபங்கள், மகா திருமண்டபம் ஆகியவை திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது. கோவிலின் வடபுறத்தில் யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நாளை (வியாழக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 5- ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.