;
Athirady Tamil News

ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம்: சாதனை படைக்கிறது டாடா குழுமம்!!

0

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது முதல் முறையாகும். இதன்மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறப்போகிறது.

தெற்கு கர்நாடகாவில் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட விஸ்ட்ரான் கார்பரேசன் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் ($600 மில்லியன்) அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் ஐபோன் 14 மாடலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை வாங்க டாடா குழுமம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. விஸ்ட்ரான், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ($1.8 பில்லியன்) மதிப்பிலான ஐபோன்களை தங்கள் தொழிற்சாலையிலிருந்து அனுப்ப உறுதியளித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் ஆலையின் பணியாளர்களை மும்மடங்காக்கவும் திட்டமிட்டுள்ளது.

விஸ்ட்ரான் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, டாடா ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், விஸ்ட்ரான் இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் டாடா, விஸ்ட்ரான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செய்தித்தொடர்பாளர்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தமிழ்நாட்டில் டாடா குழுமம், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அதன் தொழிற்சாலையில் ஐபோன் சேஸிஸ் எனப்படும் முக்கிய பாகத்தை உருவாக்கி வருகிறது.

கோவிட் முடக்கம் மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஆகிய காரணங்களால் சீனாவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகும் முயற்சிகளை ஆப்பிள் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் லாபகரமான நிதிச்சலுகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு திட்டங்களை வகுத்ததில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. டாடா குழுமத்தின் இந்த முயற்சி உறுதியானால் உலகின் தொழிற்சாலை என்ற சீனாவின் தற்போதைய நிலையை மாற்ற மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.