;
Athirady Tamil News

சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 லட்சம் டாலர் இழப்பீடு.. மெக்டொனால்டு உணவகத்துக்கு உத்தரவு!!

0

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில் சிக்கியிருக்கிறது. அதன்மீது அவர்களின் 4 வயது குழந்தை ஒலிவியாவின் கால் பட்டதால் குழந்தையின் கால் வெந்துள்ளது.

குழந்தை வலியால் துடித்ததால் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தனர். அத்துடன் சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின்போது மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாகவும், 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் வாதங்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில், மெக்டொனால்டு நிறுவனம், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இனி நக்கெட்சை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.