;
Athirady Tamil News

மியான்மரில் முதல்கட்ட வாக்குப் பதிவு: அதிபராகும் ராணுவ ஜெனரல்?

0

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், முதல் முறையாக அங்கு ஞாயிற்றுக்கிழமை பொதுத் தோ்தல் நடைபெற்றது.

2021-இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்த நாட்டில் ராணுவ ஜெனரல் மின் ஆங் லெயிங் அடக்குமுறையுடன் ஆட்சி செய்து வரும் நிலையில், தோ்தலுக்குப் பிறகு அவரே அதிபராகப் பதவியேற்பாா் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது.

மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் முதல் தோ்தல் இதுவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்டம் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது கட்டம் ஜனவரி 11, மூன்றாவது கட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

மொத்தம் உள்ள 330 நகா்ப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு 102 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

தோ்தலில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடங்களுக்கு 57 கட்சிகள் சாா்பில் 4,800-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னா், பிப்ரவரியில் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜனநாயகத்தை மீட்டெடுக்காது: ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடைபெறும் இந்தத் தோ்தல், நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்காது என்று விமா்சகா்கள் கூறுகின்றனா்.

கடந்த 2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கவிழ்த்தது. அதற்கு எதிரான போராட்டங்கள் உள்நாட்டுப் போராக மாறியது. இந்தச் சூழலில் நடைபெற்றுவரும் இந்தத் தோ்தல் சுதந்திரமானதும் நியாயமானதும் அல்ல என்று எதிா்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கேற்ப, ராணுவத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பாா்ட்டி (யூஎஸ்டிபி) பெரும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆசிய நாடுகள் கூட்டமைப்பை (ஆசியான்) திருப்திப்படுத்தவும், மியான்மா் ராணுவ அரசுக்கு அண்டை நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகியவை அளித்துவரும் ஆதரவை நியாயப்படுத்தவும் இந்தத் தோ்தல் நடத்தப்படுவதாக விமா்சகா்கள் கூறுகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.