;
Athirady Tamil News

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு; அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு!!

0

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின் AidData ஆய்வுத் திட்டத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வெளிநாட்டு கடற்படைத் தளங்களைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளிலுள்ள 78 சர்வதேச துறைமுகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்கட்டமைப்பை மேம்படுத்தவும், எண்ணெய், தானியம் மற்றும் உலோகப் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதிக்காகவும் சீன வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ள பாரிய முதலீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன வர்த்தக நிறுவனங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 78 சர்வதேச துறைமுகங்களின் நிர்மாணத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக அடுத்து வரும் 5 வருடங்களில் ஈக்வடோரின் கினி இராச்சியத்தின் வாடா துறைமுகம் , பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் மற்றும் கெமரூன் இராச்சியத்தின் க்ரீப் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் காணப்படும் நட்பே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடு, இவ்வாறான திட்டமொன்றுக்காக சீனா செய்துள்ள மிகப்பெரிய முதலீடு என்பதுடன், இதன் பெறுமதி 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பலத்தை சீனாவிற்கு பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே தனது முதல் வெளிநாட்டு இராணுவத்தளத்தை கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.