;
Athirady Tamil News

மணிப்பூர் கலவரத்தில் சீனா தலையீடு?: முன்னாள் ராணுவ தளபதி கருத்து!!

0

ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பணியாற்றியவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே. ஓய்வு பெற்ற ராணுவ தளபதியான நரவானே, இந்திய சர்வதேச மையத்தில் ‘தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர், மணிப்பூர் இனக்கலவரம், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போதைப்பொருள் கடத்தல், இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டம், இந்திய பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதல்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து பதிலளித்தார். அப்போது நரவானே கூறியதாவது: வெளிநாட்டு அமைப்புகளின் தலையீட்டை ‘இல்லை’ என ஒதுக்கி தள்ள முடியாது. பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி செய்கிறது. எல்லை மாநிலங்களில் நிலவும் உறுதியற்ற தன்மை, நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கே மோசமானது.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொறுப்பிலுள்ளவர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சீன உதவி இந்த குழுக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் போதை பொருள் கடத்தலும் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் அளவும் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதியான தங்க முக்கோண பகுதியிலிருந்து (Golden Triangle) சிறிது தொலைவில் நாம் இருக்கிறோம். மியான்மர் எப்போதும் சீர்குலைந்த நிலையில் ராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது.

சிறப்பான ஆட்சி நடக்கும் நேரங்களில் கூட அந்நாட்டு அரசாங்கம் மத்திய மியான்மர் பகுதியை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய, சீன, தாய்லாந்து புற எல்லை பகுதிகளில் நடைபெற்று வரும் போதை பொருள் கடத்தலை அதனால் தடுக்க முடியவில்லை. வன்முறையால் பயனடையும் சக்திகள் இயல்பு நிலை திரும்புவதை விரும்ப மாட்டார்கள். அனைத்து முயற்சிகளையும் மீறி வன்முறை தொடர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.