ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புடின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷியா அதிபர் விளாடிமிர் புடின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, அந்நாட்டு தலைநகர் மின்ஸ்கில் நேற்று முன்தினம் (ஜூன் 27) செய்தியாளர்களுடன் அவர் பேசினார்.
அப்போது அவர், ரஷியாவில் பிரிவினைவாதம் வளர மேற்கத்திய நாடுகள் ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
”இஸ்லாமிய தேசம் ரஷியாவுக்கு எதிராகச் செயல்படும் வரையில், யாரும் அதைக் கவனிக்க விரும்பவில்லை. மாஸ்கோவில் வெடிப்புச் சம்பவங்கள் இன்றளவும் நடைபெறுகின்றன. இவை, அனைத்தும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும் வரை யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை” என அவர் கூறியுள்ளார்.
மேலும், இதேபோன்று, மேற்கத்திய நாடுகள் ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததாகவும், முன்பு பயங்கரவாதம் போன்றவை ரஷியாவுக்கு எதிரான ஆயுதமாகச் செயல்படுத்தப்பட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷியா – உக்ரைன் போரினால், பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிரான நிலைபாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.