தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
பின்னர் 12 நாள்கள் போருக்குப் பிறகு இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பேச்சுவார்த்தையின் மூலமாக முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இருப்பினும் அமெரிக்கா, ஈரான் தலைவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகப் பேசி வருகின்றனர்.
அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதால் அமெரிக்கா தலையிட்டதாகவும் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரான் தலைவர் கமேனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தெஹ்ரான் வரம்புக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவதாக உளவுத் துறை தகவல் கொடுத்தால், ஈரான் மீது கண்டிப்பாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும். இங்கு கேள்விக்கே இடமில்லை, மற்றொரு ராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட சற்றும் தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.