;
Athirady Tamil News

கொல்கத்தா: காதலனை கொன்று விடுவோம் என மிரட்டல்; கால்களை தொட்டு கெஞ்சியும் பலாத்காரம் செய்த கும்பல்

0

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (வயது 24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்ட கல்லூரியில் மாணவி பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

கல்லூரியின் முன்னாள் மாணவரான அந்நபருடன் சேர்ந்து மாணவர்களான மற்ற 2 பேரும் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இரவு 7.30 மணியில் இருந்து 10.50 மணி வரை 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக கல்லூரியில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அந்த மாணவியை ஆக்கி மட்டையால் அடித்தும், பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்தும், அதனை ஆன்லைனில் வெளியிட்டு விடுவோம் என அச்சுறுத்தியும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுபற்றி மாணவி புகாரில் அளித்த விசயங்களை குறிப்பிட்டு போலீசார் கூறும்போது, சம்பவம் பற்றி வெளியே கூறினால், மொபைல் போனில் எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என 3 பேரும் அச்சுறுத்தினர் என அந்த மாணவி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை தடய அறிவியல் ஆய்வுக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் மனோஜித் மிஷ்ரா என்பவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். அக்கட்சியின் மாணவரணியின் செயலாளராகவும் உள்ளார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ஜைப் அகமது (வயது 19) மற்றும் மற்றொரு மாணவர் பிரமீத் முகர்ஜி (வயது 20) ஆகிய இருவரும் மாணவியை பலாத்காரம் செய்து காயப்படுத்தி உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கல்லூரியின் பாதுகாவலரான பினாகி பானர்ஜி (வயது 55) இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால், மொத்த கைது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. இதனை போலீசார் இன்று உறுதி செய்தனர்.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் முன்பே கைது செய்யப்பட்டனர். அவர் அளித்த புகாரில், மனோஜித் மிஷ்ரா எதுவும் செய்து விடாமல் இருப்பதற்காக அவரை பிடித்து தள்ளி விட்டேன். போராடினேன். எனக்கு காதலர் இருக்கிறார். விட்டு விடுங்கள் என அழுது கெஞ்சினேன். மனோஜித்தின் காலை பிடித்து, விட்டு விடும்படி கேட்டும் விடவில்லை. காதலரை கொன்று விடுவோம் என மிரட்டினார்.

கட்டாயப்படுத்தி பாதுகாவலரின் அறைக்குள் இழுத்து சென்றனர் என புகாரில் தெரிவித்து உள்ளார். மற்ற 2 பேர் முன்னிலையில் மனோஜித் பலாத்காரத்தில் ஈடுபட்டார். அப்போது, மாணவிக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில், பயத்தில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். ஆனால், 3 பேரும் உதவவில்லை.

அவர்களிடம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுத்ததுடன், கல்லூரியின் நுழைவு கதவை மூடியுள்ளனர். பாதுகாவலரும் உதவி செய்ய முடியாதவராக இருந்துள்ளார் என அந்த மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார்.

பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த மாணவி தப்ப முயன்றபோது, ஆக்கி மட்டையில் அடித்துள்ளனர். நீதி வேண்டும் என புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.