சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரோங்ஜியாங்கிலுள்ள துயிலு ஆற்றின் நீர்மட்டமானது, உயர்நிலை வெள்ள அளவான 253.5 மீட்டரை நேற்று (ஜூன் 28) மாலை 5 மணியளவில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உள்நாட்டு வெள்ள கட்டுபாடு மற்றும் வறட்சி மீட்புத் துறை தலைமைச் செயலகம், வெள்ள அபாய எச்சரிக்கை நிலையை, 2-ல் இருந்து 1 ஆக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை ரோங்ஜியாங் மாவட்டத்தில் இருந்து 48,900 பேரும், கோங்ஜியாங் மாவட்டத்தில் இருந்து 32,000 பேரும் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சீனாவில் வெள்ள அபாயத்தை அறிவிக்கும் விதமாக 4 நிலை எச்சரிக்கை முறைகள் வழக்கத்திலுள்ளன. இதில், 1 ஆம் நிலை என்பது மிக மிக அதிகளவில் வெள்ளம் ஏற்படும் சூழலில் மட்டுமே பெரும்பாலும் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் ரோங்ஜியாங் மாகாணத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உச்சகட்ட நீர் ஓட்டம் வினாடிக்கு 11,360 கியூபிக் மீட்டர்களாக உயர்ந்துள்ளது.
மேலும், ரோங்ஜியாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.