;
Athirady Tamil News

வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்…!!! (PHOTOS)

0

தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அபகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள
வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்…!!!

புராதனப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் 188 இன் 16 ஆம் பிரிவின் கீழ், வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களின் நான்கு பூர்வீக மதத்தலங்களை புராதன நினைவுச் சின்னங்களாக வெளிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள 2023.02.01 ஆம் திகதிய 2317ஃ57 ஆம் மற்றும் 2317ஃ58 ஆம் இலக்க, வர்த்தமானப் பத்திரிகை அறிவுறுத்தல்களை மீளப்பெறக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால், ஜனாதிபதிக்கும், துறைசார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கும் தனித்தனிக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

2023.08.07 ஆம் திகதியிட்டு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் வதிவிடப் பிரதிநிதி, சர்வதேச நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், யுனெஸ்கோ மனித உரிமைகள் ஆணையகம் என்பவற்றுக்கு பிரதியிட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பறாளை முருகன் ஆலயம் உள்ளிட்ட குறித்த நான்கு இடங்களும் இன்றளவும் முறைசார் பூஜை வழிபாடுகள் இயற்றப்படும் தமிழ் மக்களுடைய புராதன மதவழிபாட்டுத் தலங்களாகப் பேணப்பட்டு வரும் நிலையில், எமது மக்களை உணர்வுரீதியான நெருக்கீடுகளுக்கு ஆளாக்கி இனத்துவ அடிப்படையிலான சிந்தனைகளைத் தூண்டும் நோக்கோடு மேற்படி மதத்தலங்களை புராதன நினைவுச் சின்னங்களாக வெளிப்படுத்தியுள்ளமை தமிழர்களது பூர்வீக நிலங்களை வலிந்து ஆக்கிரமிப்புச் செய்வதன் அதிஉச்சமான வெளிப்பாட்டு வடிவமாகவே தென்படுகிறது.

குறிப்பாக பறாளை முருகன் ஆலய பரிபாலன சபையினரிடமுள்ள 1786 ஆம் ஆண்டு எழுதப்பட்ட காணி உறுதியில் அவ் ஆலய வளாகத்தினுள் அரசமரம் இருப்பதாகக் குறித்துரைக்கப்பட்டிராத நிலையில், சூழலியல் நிபுணர்களின் கருத்துக்கமைய வெறுமனே 200 ஆண்டுகளுக்குட்பட்ட பழமையுடைய அவ் அரசமரத்தை, சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக மகாவம்சம் கூறும் சங்கமித்தையின் வருகையோடு பொருத்திக் கூறுவதென்பது வரலாற்றுத்திரிபை ஏற்படுத்துவதாகவும், அப்பட்டமான பொய்மை நிறைந்த கருத்தாகவுமே அமைந்துள்ளது.

ஏற்கனவே, குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை முதல் உருத்திரபுரம் சிவன்கோவில், மயிலத்தமடு மாதவனை, கச்சல் சமளங்குளம் ஈறான நூற்றுக் கணக்கான இடங்கள் தொல்பொருள் எனும் போர்வையில் வலிந்து அபகரிக்கப்பட்டு, அவ்விடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளும், துறவிமடங்களும், சிங்களக் குடியேற்றங்களும் திட்டமிட்டு நிறுவப்படும் சூழலில், தமிழர்களின் கலாசார மற்றும் மரபுரிமை அடையாளங்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாண மண்ணிலுள்ள ஆலயங்களையும் அவற்றின் சுற்றயல் பகுதிகளையும் புராதனச் சின்னங்களாக அடையாளப் படுத்தியிருப்பதை, அவ்விடங்களை முற்றாக பௌத்த மயமாக்கும் சிந்தனையின் ஆரம்ப வெளிப்பாடென்றே கருதமுடிகிறது.

போர்க்கால நெருக்கீடுகள், போரியல் வாழ்வின் இழப்புகள் என்பவற்றில் இருந்து இன்றளவும் மீண்டெழ முடியாத நிலையில், ஈடுசெய் நீதி கூட மறுக்கப்பட்டவர்களாக வாழும் ஈழத்தமிழர்களை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினதும் அதன் கீழியங்கும் தொல்லியல் திணைக்களத்தினதும் அண்மைக்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளன.

ஓர் மதவாதச் சிந்தனையின்பாற்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்நிலைகளை மேலும் வலுப்படுத்தாது, தமிழர்களையும் இந்த நாட்டின் சகோதர இனத்தவர்களாகக் கருதி, அவர்களது வழிபாட்டுரிமைகளுக்கேனும் மதிப்பளிப்பதன் மூலம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதச் சின்னங்களையும், தமிழர்களது மரபார்ந்த அடையாளங்களையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த இந்த நாட்டின் தலைவராக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அதற்கான நல்லெண்ணச் சமிக்ஞையாக 2023.02.01 ஆம் திகதிய 2317/57 ஆம் மற்றும் 2317/58 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல்களை மீளப்பெற துறைசார் அமைச்சரை அறிவுறுத்துமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.