;
Athirady Tamil News

சல்வார் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது ; 9 பேர் மீதும் கொலை முயற்சி குற்றச்சாட்டு!!

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் கீரிமலை பிரதேசங்களில் இரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தியும் பெறுமதியான பொருள்களை சேதமாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தது.

அண்மையில் கோப்பாய் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தோர் சல்வார் ஆடையை அணிந்த வாறு தாக்குதலில் ஈடுபட்டமை சிசிரிவி கமரா பதிவில் வெளிப்பட்டது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், கைக்கோடரி ஒன்றும் மடத்தல் ஒன்றும் தாக்குதல்களுக்கு அணிந்து சென்ற பெண்கள் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு மீதான தாக்குதலுக்கு டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரே காரணம் என்றும் அவர் தமக்கு பணம் அனுப்பியதாகவும் முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.