;
Athirady Tamil News

வேட்பாளர் மீது இன்க் வீசப்பட்ட சம்பவம்.. அவங்க தான் ஊத்த சொன்னாங்க.. வசமாக சிக்கிய பா.ஜ.க…!!!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள அடாரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார். அப்போது அங்கு வரவேற்பளிக்க காத்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே இருந்த ஒருவர் “தாரா சிங் ஜிந்தாபாத்” என உரத்த குரலில் கூறியவாறே தாரா சிங்கை நெருங்கி வந்து அவர் மீது இன்க்-ஐ ஊற்றி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகழும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நற்பெயரும் சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்,” என தாரா சிங் கூறினார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை தேடி வந்தது. இந்நிலையில் இக்குற்றத்தை செய்ததாக அபிமன்யு யாதவ் என்பவர் கோசி காவலதுறையிடம் தானாக சரணடைந்துள்ளார். ஆனால், தாக்குதல் நடத்திய காரணம் குறித்து அபிமன்யு அதிர்ச்சியளிக்கும் விதமாக கருத்து கூறியுள்ளார். “இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான நிலையில் இருக்கிறது என்பதால் இதை செய்ய சொல்லி பா.ஜ.க.வின் கமிட்டி உறுப்பினர் பிரின்ஸ் யாதவ் கேட்டு கொண்டார். அதனால் இச்செயலை நான் செய்தேன்.

என்னை காப்பாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்,” என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இவர் சரணடைந்துள்ளதை உறுதி செய்துள்ள நகர காவல்துறை அதிகாரி தனஞ்சய் மிஸ்ரா, அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் முதலில் சமாஜ்வாதி கட்சியினரால் தூண்டப்பட்டு நடைபெற்றதாக நம்பப்பட்டது. பிறகு பா.ஜ.க.-வினரே செய்ய சொன்னார்கள் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.