;
Athirady Tamil News

ஜி 20 உச்சி மாநாடு: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர தயங்குவது ஏன்?!!

0

இந்தியா தலைமை தாங்கும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

ஆனால் உலக அரசியலின் மையமாகவும், உலக அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் திகழும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

“டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திட்டம் புதினுக்கு இல்லை. யுக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே தற்போதைக்கு அதிபருக்கு முக்கியமான பணி” என்று புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோப் ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

துருக்கி உடனான ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’ குறித்து ஆலோசனை நடத்த, அந்நாட்டின் அதிபர் எர்துவான் அழைப்பின் பேரில் புதின் விரைவில் துருக்கிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதியில் புதின் துருக்கிக்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால், எதிர்பார்க்கப்பட்ட படி அவரது பயணம் நிகழாமல் போகவும் வாய்ப்புள்ளது என்று துருக்கி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருப்பது புதினுக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல. இந்தோனீசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

இதேபோன்று, 2014 இல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டிலும் புதின் பங்கேற்கவில்லை. அப்போது அந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அத்துடன், தென்னாப்பிரிக்கா அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை.

அவருக்கு பதிலாக, இந்த மாநாட்டிலும், கடந்த ஆண்டு பாலி நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டிலும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் பங்கேற்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அப்போதில் இருந்து புதின் வெளிநாட்டு பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

2002 ஜூனில் தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் பயணம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் புதின் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின் போது, இந்திய பிரதமர் மோதியையும் புதின் சந்தித்து பேசினார்.

அப்போது. “இது போர் புரிவதற்கான காலம் அல்ல” என்று புதினிடம் மோதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை.
புதின் இந்தியா வராததற்கு என்ன காரணம்?

யுக்ரேனை சேர்ந்த சில குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு அழைத்து வரப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், அதிபர் புதினை கைது செய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இதேபோன்று, ரஷ்ய மனித உரிமைகள் ஆணையர் அலெக்ஸிவ்னா லவோவா பெலோவாவுக்கு எதிராகவும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரஷ்யாவும், யுக்ரேனும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கவில்லை.

ஆனால், தமது மண்ணில் நடக்கும் குற்றங்களை ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வருவதாக கூறி. அதன் விதிமுறைகளை 2015 இல் யுக்ரேன் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், யுக்ரேன் மீது ரஷ்ய போர் தொடுத்த அடுத்த மாதமே, அதாவது மார்ச் 2022 ல், அங்கு இனப்படுகொலை நிகழ்ந்ததாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐசிசி தரப்பு வழக்கறிஞரான கரீம் கான் உடனே விசாரணையை தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவும் ஐசிசியில் அங்கம் வகித்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் அங்கு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதின் கலந்து கொண்டிருந்தால், சர்வதேச அமைப்பான ஐசிசி, புதினுக்கு எதிராக பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்குமாறு தென்னாப்பிரிக்கா அவரை வற்புறுத்தி இருக்கலாம்.

அப்படியொரு தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது எனக் கருதி,மாநாட்டில் பங்கேற்பதை புதின் தவிர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சொல்லப்போனால், ஐசிசியில் உறுப்பினர்களாக உள்ள 123 நாடுகளும், இந்த அமைப்பு பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை அமல்படுத்துவதில் ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவை பொருத்தவரை, ஐசிசியில் உறுப்பினராக இல்லாததன் காரணமாக, அதன் பிடிவாரண்ட் போன்ற உத்தரவுகளை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இல்லை.

உதாரணமாக, இந்தியா- ஆப்பிரிக்கா மன்ற கூட்டத்தில் பங்கேற்க, சூடான் முன்னாள் அதிபர் ஒமர் ஹசன் அல் பஷீர், 2015 இல் இந்தியாவுக்கு வருகை புரிந்திருந்தார்.

அப்போது அவரை கைது செய்ய இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவே இல்லை.

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதின் பங்கேற்றிருந்தால், அங்கு அவரை கைது செய்வதற்கான அழுத்தம் எழலாம் என்று, இந்த மாநாட்டுக்கு முன் அச்சம் எழுந்தது.

ஆனால், ஐசிசியில் இந்தியா அங்கம் வகிக்காததால், டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால், அவரை கைது செய்வது தொடர்பாக, ஐசிசி இந்தியாவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாது.

ஆனாலும், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற புதின் இந்தியா வராமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி சர்வதேச அரசியலில் எழுந்துள்ளது.

யுக்ரேன் போரின் விளைவாக உலக அளவில் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறி வருகிறது.

இந்த கேள்விக்கு, “யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் புதின் தற்போது கவனம் செலுத்த வேண்டி உள்ளது” என்று அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோப் விளக்கம் அளித்துள்ளார்.

யுக்ரேன் போரின் விளைவாக ரஷ்யாவும், புதினும் உலக அளவில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு மிகவும் மோசமாக உள்ளது. அந்நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்றும் டிமிர்ரி பெஸ்கோப் மேலும் கூறி உள்ளார்.

“உலக அளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் தான் பங்கேற்றால், அங்கு தன்னுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது; அத்துடன் தானும் விமர்சனத்துக்கு ஆளாகலாம் என்ற அச்சமும் புதினுக்கு இருக்கலாம்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்க புதின் விரும்பாமல் இருக்கலாம். இவையே டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிற்கு புதின் வருகை தரலாம் இருப்பதற்கு முக்கிய காரணம்” என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆசிய மற்றும் ரஷ்ய விவகாரங்கள் துறையின் விரிவுரையாளர் சஞ்சய் பாண்டே கூறுகிறார்.

மற்றபடி, தமக்கு எதிராக ஐசிசி பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் காரணமாக புதின் இந்தியா வருவதை தவிர்ப்பதாக தான் கருதவில்லை. ஏனெனில் அவர் இந்தியாவில் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் பாண்டே கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் யுக்ரேன் போர் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவும் புதின் இந்தியா வருவதை தவிர்க்கலாம் என்றும் தெரிகிறது.

இதனிடையே, ஜி 20 மாநாட்டில் பங்கேற்க யுக்ரேனுக்கு இந்தியா அழைப்பு விடுக்காதது குறித்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் சுதந்திர தினத்தையொட்டி அண்மையில் அவர், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, “ஜி20 மாநாட்டில் பங்கேற்க உங்களுக்கு (ஜெலன்ஸ்கி) அழைப்பு விடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தனது வருத்தத்தை ஜஸ்டின் ட்ரூடோ பதிவு செய்திருந்தார்.

ஜி 20 மாநாட்டில் யுக்ரேனின் குரல் ஒலிப்பதை தான் உறுதி செய்வேன் என்றும், ஜெலன்ஸ்கி உடனான உரையாடலின்போது ஜஸ்டின் உறுதி அளித்திருந்தார்.

டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது.

ஜி 20 அமைப்பில் யுக்ரேன் உறுப்பினராக இல்லை. ஆனால் இந்த மாநாட்டை நடத்தும் இந்தியா ஸ்பெயின், வங்கதேசம், மொரிஷியஸ், எகிப்து, நெதர்லாந்து, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஒன்பது நாடுகளை பார்வையாளர்களாக பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் யுக்ரேனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

யுக்ரேன் போருக்கு பிறகு, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை இந்திய பிரதமர் மோதி பலமுறை சந்தித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டின் போதும் இரு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர் என்று இந்த விவகாரம் குறித்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

ஜி 20 என்பது ஓர் பொருளாதார அமைப்பு. மாறாக அது நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான அமைப்பு அல்ல என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆகஸ்ட் 16 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

யுக்ரேன் போருக்கு தீர்வு காண்பது, இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி 20 மாநாட்டின் முக்கிய நோக்கம் அல்ல. மாறாக, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் என்று இந்த மாநாட்டின் ஆயத்த பணிகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசின் அதிகாரியான அமிதாப் காந்த் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 அமைப்பில், ரஷ்யா நிரந்தர உறுப்பினராக உள்ளது.

இதனிடையே, டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், யுக்ரேன் போரை மையமாக கொண்டு, ரஷ்ய அதிபர் புதின் மீது விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டனின் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியான டாம் டுகன்ஹவுட், “ரஷ்யாவின் தாக்குதல் இழிவானது மற்றும் சட்டவிரோதமானது” என்று குறிப்பிட்டு, அதிபர் புதினை விமர்சித்து பேசினார் என்று பிரிட்டன் நாளிதழான ‘தி டெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டிருந்தது.

பிரிட்டனின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதத்தில், ஊழலுக்கு உலக அளவில் பெயர் போன நாடு பிரிட்டன் என்று விமர்சித்த ரஷ்ய பிரதிநிதிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

யுக்ரேன் போருக்கு பிறகு ரஷ்யாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே அதிகரித்துள்ள மோதல் போக்கின் மற்றொரு வெளிப்பாடாகவே கொல்கத்தா கூட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தலைமையில் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டங்களில் ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.

ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை எட்ட வைப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் இந்த சவாலுக்கு சீனாவும், ரஷ்யாவும் காரணமாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.