;
Athirady Tamil News

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு தடை!!

0

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை போன்று மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். எர்ணாகுளம் அருகே உள்ள இந்த கோவிலில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமாகும். இந்த கோவிலில் பகவதி அம்மன் தினமும் 3 உருவங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலையில் சரஸ்வதியாகவும், மாலையில் மகாலட்சுமியாகவும், இரவில் துர்க்கையாகவும் காட்சி தருகிறார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பகவதி அம்மனுக்கு பட்டுப்புடவைகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

இதற்காக கோவில் அருகே உள்ள கடைகளில் பட்டுப்புடவைகள் விற்கப்படுகின்றன. பக்தர்கள் வழங்கக்கூடிய அந்த பட்டுப்புடவைகள் பாலிஸ்டர் துணியில் தயாரிக்கப்பட்டவை ஆகும். பக்தர்கள் கொடுக்கும் சிறிய மற்றும் பெரிய சிவப்பு நிற பாலிஸ்டர் பட்டுப்புடவைகள் ஒவ்வொரு மாதமும் அதிகளவில் சேர்ந்து விடுகிறது. சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு பக்தர்கள் வழங்கும் பட்டுப்புடவைகள் கோவில் திடலில் புதைக்கப்படும். அவ்வாறு புதைக்கப்பட்ட புடவைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகம் மூலம் அதிகளவில் அப்புறப்படுத்தப்பட்டது.

பாலிஸ்டர் பட்டுப்புடவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது. இதனால் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பாலிஸ்டர் பட்டுப்புடவைகள் வழங்க கொச்சி தேவசம்போர்டு தடை விதித்துள்ளது. சோட்டானிக்கரை பஞ்சாயத்து ஒத்துழைப்புடன் இந்த அறிவிப்பை தேவசம் போர்டு வெளியிட்டது. பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கான தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கோவில் கவுண்டரில் பருத்தி பட்டுப்புடவைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவிலிலும் பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.