;
Athirady Tamil News

ஜி 20 மாநாடு: ரஷ்ய அமைச்சர் குறித்து கருத்து; மன்னிப்பு கோரிய ரஷ்ய தூதர் பேசியது என்ன? !!

0

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

“இதுதொடர்பான தகவலை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன். இருப்பினும் ஷி ஜின்பிங்கை சந்திப்பேன்” என்று பைடன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த சந்திப்பு எப்போது நிகழும் என்று அவர் திட்டவட்டமாக கூறவில்லை. அதே நேரம் பைடனின் இந்த கருத்து, ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பது குறித்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பீடபூமியை சீனப் பகுதி என்று கூறி, ஒரு வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்துள்ளதா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த வார இறுதியில் நடைபெற்ற உள்ள ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க திட்டமிடவில்லை என்று பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை மேற்கோள்காட்டி, சீன ஊடகங்கள் சில கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன.

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை.

இந்த செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள சீன பிரதிநிதிகள் குழுவை பிரதமர் லி கியாங் வழிநடத்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறும்போது, “ஜி 20 என்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரு பொருளாதார மன்றம். இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள சீனா, ஜி 20 தொடர்பான நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறது.

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சீனப் பிரதிநிதிகள் குழுவை பிரதமர் லி கியாங் வழிநடத்துவார்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பது குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதியான தகவலையோ, மறுப்பையோ தெரிவிக்கவில்லை.

இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆனால் உலக அரசியலின் மையமாகவும், உலக அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் திகழும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை.

“டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திட்டம் புதினுக்கு இல்லை. யுக்ரேனில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே தற்போதைக்கு அதிபருக்கு முக்கியமான பணி” என்று புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோப் ரஷ்ய ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அப்போதில் இருந்து புதின் வெளிநாட்டு பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

2002 ஜூனில் தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானுக்கும் புதின் பயணம் மேற்கொண்டிருந்தார்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின்போது, இந்திய பிரதமர் மோதியையும் புதின் சந்தித்து பேசினார்.

அப்போது. “இது போர் புரிவதற்கான காலம் அல்ல” என்று புதினிடம் மோதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேன் போரின் விளைவாக உலக அளவில் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறி வருகிறது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) புதினுக்கு எதிராக கடந்த மார்ச் 17 ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. உக்ரேனிய குழந்தைகளை சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதினைத் தவிர, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் அலெக்சிவ்னா லவோவா பெலோவாவுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரஷ்யாவும், யுக்ரேனும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கவில்லை.

ஆனால், தமது மண்ணில் நடக்கும் குற்றங்களை ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வருவதாக கூறி. அதன் விதிமுறைகளை 2015 இல் யுக்ரேன் பின்பற்ற தொடங்கியது.

இந்த நிலையில், யுக்ரேன் மீது ரஷ்ய போர் தொடுத்த அடுத்த மாதமே, அதாவது மார்ச் 2022 ல், அங்கு இனப்படுகொலை நிகழ்ந்ததாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐசிசி தரப்பு வழக்கறிஞரான கரீம் கான் விசாரணை மேற்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவும் ஐசிசியில் அங்கம் வகித்து வருகிறது. அண்மையில் அங்கு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதின் கலந்து கொண்டிருந்தால், சர்வதேச அமைப்பான ஐசிசி, புதினுக்கு எதிராக பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்குமாறு தென்னாப்பிரிக்கா அவரை வற்புறுத்தி இருக்கலாம்.

அப்படியொரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது எனக் கருதி,மாநாட்டில் பங்கேற்பதை புதின் தவிர்த்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

சொல்லப்போனால், ஐசிசியில் உறுப்பினர்களாக உள்ள 123 நாடுகளும், இந்த அமைப்பு பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை அமல்படுத்த தங்களாலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவை பொருத்தவரை, ஐசிசியில் உறுப்பினராக இல்லாததன் காரணமாக, அதன் பிடிவாரண்ட் போன்ற உத்தரவுகளை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உதாரணமாக, இந்தியா- ஆப்பிரிக்கா மன்ற கூட்டத்தில் பங்கேற்க, சூடான் முன்னாள் அதிபர் ஒமர் ஹசன் அல் பஷீர், 2015 இல் இந்தியாவுக்கு வருகை புரிந்திருந்தார்.

அப்போது அவரை கைது செய்ய இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவே இல்லை.

எனவே, டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால், அவரை கைது செய்வது தொடர்பாக, ஐசிசி இந்தியாவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாது.

ஆனாலும், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற புதின் இந்தியா வராமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக புதினின் செய்தித் தொடர்பாளர், ‘யுக்ரேனில் ராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார்’ என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவும் புதினும் தற்போது உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளன. ரஷ்யாவிற்கு எதிராக மேற்குலகம் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

“உலக அளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் தான் பங்கேற்றால், அங்கு தன்னுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது; தானும் விமர்சனத்துக்கு ஆளாகலாம் என்ற அச்சமும் புதினுக்கு இருக்கலாம்.

அத்துடன், மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்க புதின் விரும்பாமல் இருக்கலாம். இவையே டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிற்கு புதின் வருகை தராமல் இருப்பதற்கு முக்கிய காரணம்” என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆசிய மற்றும் ரஷ்ய விவகாரங்கள் துறையின் விரிவுரையாளர் சஞ்சய் பாண்டே கூறுகிறார்.

மற்றபடி, தனக்கு எதிராக ஐசிசி பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் காரணமாக புதின் இந்தியா வருவதை தவிர்ப்பதாக தான் கருதவில்லை. ஏனெனில் அவர் இந்தியாவில் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் பாண்டே கூறியுள்ளார்.

இருப்பினும், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க யுக்ரேனையும் இந்தியா அழைக்கவில்லை.

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்கு யுக்ரைன் அழைக்கப்படாதது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

யுக்ரைனின் சுதந்திர தின விழாவில் செலென்ஸ்கியிடம் பேசிய ட்ரூடோ, “உங்களை அங்கு (ஜி 20 மாநாடு) பார்க்க முடியாது என்பது குறித்து ஏமாற்றமடைகிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், ஜி 20 மாநாட்டில் யுக்ரைனின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதாகவும் தமது உரையாடலின்போது ட்ரூடோ செலென்ஸ்கியிடம் கூறியிருந்தார்.

ட்ரூடோவுடனான தனது இந்த தொலைபேசி உரையாடலை டெலிகிராமில் செலென்ஸ்கி பகிர்ந்திருந்தார்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குறித்து தான் தெரிவித்த கருத்துக்காக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் குறித்து தான் தெரிவித்த கருத்துக்காக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தொடர்பான சமீபத்திய தனது கருத்துகள் அவரது பிரபலத்தை எடுத்துரைக்கும் நோக்கில் கூறப்பட்டவை என்றும் டெனிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோஃப் பங்கேற்றிருந்தார்.

அவரிடம், டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி நாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்காதது குறித்தும், ரஷ்ய பெண்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதின் இந்தியாவுக்கு வருகை புரிந்தால் நன்றாக இருக்கும் என்றும் அந்த செய்தியாளர் கூறியிருந்தார்.

அதற்கு,”ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவும் திருமணம் ஆனவர் தான். அத்துடன் அவர் பெண் பித்தரும் கூட. ஆனால் அவர் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார்” என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோஃப் பதில் அளித்திருந்தார்.

ரஷ்ய அமைச்சர் குறித்த அந்நாட்டு தூதரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து தமது இந்த கருத்து குறித்து டெனில் எலிபோஃப் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “ரஷ்ய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆண்கள், பெண்கள் என்று இரண்டு தரப்பினர் மத்தியிலும் பிரபலமானவர் என்று தான் சொல்ல வந்தேன். ஆனால், எனது இந்த கருத்து சிலரை புண்படுத்தியதாக அறிகிறேன்.

எனவே, ரஷ்ய அமைச்சர் குறித்து நான் தெரிவித்த கருத்துக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ஆனால், தமது புத்திசாலித்தனம், மக்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் போன்ற காரணங்களால் அமைச்சர் லாவ்ரோவ் பலதரப்பினாலும் பாராட்டப்படுபவர்” என்று டெனிஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.