;
Athirady Tamil News

17 டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை: 4 வயது சிறுவனின் நோயை கண்டறிய உதவிய ‘சாட்ஜிபிடி’ தொழில்நுட்பம்!!

0

ஏ.ஐ. (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மருத்துவ துறையிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 4 வயது சிறுவனின் நோயை 17 டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கண்டுபிடித்து பதில் அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் என்ற 4 வயது சிறுவன் கடந்த 3 வருடங்களாக கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். மேலும் அந்த சிறுவனின் வளர்ச்சியும் குன்றிய நிலையில் நோயோடு போராடி உள்ளான். இதனால் சிறுவனை அவனது தாயார் கர்ட்னி பல டாக்டர்களிடமும் அழைத்து சென்று காட்டியுள்ளார். ஆனால் டாக்டர்கள் பலரும் அந்த சிறுவனுக்கு எந்த வகையான நோய் தாக்கி உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. சிறுவன் உணவு பொருட்களை சாப்பிட ஆரம்பித்ததும் அவனது கடைவாய் பற்களில் மிகுந்த வலி உண்டாகி உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை டாக்டர்களால் உறுதியாக கண்டறிந்து கூற முடியவில்லை.

மாறாக ஒவ்வொரு டாக்டரும் மற்ற டாக்டர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் 17 டாக்டர்களை பார்த்தும் சிறுவன் அலெக்சின் நோயை கண்டறிய முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த சிறுவனின் தாயார் கர்ட்னி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஓபன் ஏ.ஐ.-ன் சாட்ஜிபிடி உதவியை நாடி உள்ளார். அதில் அவரது மகனின் நோய்க்கான அறிகுறி மற்றும் இதுவரை டாக்டர்களிடம் காட்டிய மருத்துவ அறிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் நோயை சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கண்டறிந்து கூறியுள்ளது. அதாவது சிறுவன் அலெக்ஸ் ‘டெதர்ட் கார்டு சிண்ட்ரோம்’ எனப்படும் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சாட்ஜிபிடி பரிந்துரைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுவனை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்து சென்று உள்ளார். மேலும் அலெக்சின் எம்.ஆர்.ஐ. படங்களையும் காட்டிய போது சிறுவனின் நோய் காரணங்கள் கண்டறியப்பட்டு அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுவன் குணமடைந்து வருகிறான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.