;
Athirady Tamil News

கொட்டும் மழைக்கு மத்தியிலும் அஞ்சலி!! (PHOTOS)

0

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.