;
Athirady Tamil News

யாழில் சூழலை நாசம் செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: இளைஞர்கள் அதிரடி

0

யாழ்ப்பாணம் – பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, சனநடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொண்டுவந்து போடுபவர்களை அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்ப்பாணம் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றை அண்மித்த இந்தப் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடமாகும்.

குறித்த பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களால் அந்தப் பகுதியில் வதிபவர்களும், பல்கலைக்கழக, தொழிநுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

மக்களின் விசனம்
அத்துடன் வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் கொண்டுவந்து குப்பைகளையும், கழிவுகளையும் பலர் இந்த வீதியில் வீசி விட்டுச் செல்வதனால் அவை வீதிக்குக் குறுக்காக விலங்குகளால் இழுத்து விடப்படுவதனால் நடந்து செல்வோர் உட்படப் பலர் இடையூறுக்கு உள்ளாக வேண்டியுள்ளதாகவும், மனிதக் கழிவுகள் உட்பட வெறுக்கப்படத்தக்க கழிவுகளை வீசுவதனால் அவை துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடுகளை எதிர் நோக்க வேண்டி இருப்பதாகவும் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவிக்கப்பட்டு, பிரதேச சபையினர் தினமும் அவற்றை அகற்றி வருகின்ற போதிலும், வார இறுதி நாட்களில் வாகனங்களில் வரும் பிரபல வைத்தியர்கள், அதிகாரிகள் உட்படப் பலர் தம்முடன் எடுத்துவரும் குப்பைப் பொதிகளை வீசி விட்டுச் செல்வதைப் பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இவ்வாறு சூழலை நாசம் செய்பவர்களை சமூக வலைத்தளங்களுக்கூடாக அம்பலப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

எனினும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தாத வகையில் இத்தகவலை வெளிப்படுத்திய பின்னரும் இத்தகைய இழிசெயலைச் செய்வோரை அம்பலப்படுத்தவுள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த இளையோர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.