;
Athirady Tamil News

பிரித்தானிய அமைச்சருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

0

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் முடிவில் நேற்று (12.10.2023) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பில் எங்களிடத்தே கேட்டிருந்த போது அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் நாங்கள் எடுத்துக் கூறியிருந்தோம்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள்
ஆனாலும் எங்களுடைய பலவிதமான பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதேநேரத்தில் எத்தளவிற்கு இவற்றிற்கு அப்பால் சென்று இரண்டு இனங்களையும் என்ன விதமாகச் சேர்த்து வைக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராயந்தார்கள்.

இதைப் பற்றி பல விடயங்களை பேசியதுடன் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டிருந்தனர்.

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என்பதை சுட்டி காட்டினோம்.

இது சம்பந்தமாக கடந்த 2003 இலே அவர்கள் ஒன்று தொடங்கினார்கள். அதன் பின்பு என்னுடைய காலத்திலே நான் கேட்டு தொடங்கினார்கள். ஆனால் அதை அவர்கள் முடிக்கவில்லை.

ஆகவே எங்களுடைய வடகிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு இருக்கும் தேவைகள் என்ன? அதாவது போரின் பின்னர் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன என்பது சம்பந்தமாக போதுமான அறிக்கைகள் தயாரிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

மேலும் எங்களது அரசியல் ரீதியான பிரச்சனைகள தொடர்பில் கேட்ட போதும் போதுமான அளவு நாங்கள் எல்லோருமே அதனை எடுத்துக் கூறியிருந்தோம். குறிப்பாக அரசாங்கத்தினுடைய முகம் தற்போது சற்று வித்தியாசமாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.

ஆனாலும் வருங்காலத்தில் இவை மாற்றமடையக் கூடும் என்ற ஒரு கருத்தை எங்களிடத்தே அவர்கள் முன்வைத்தார்கள். ஆகவே அதிலிருந்து அவர்களும் தங்களால் இயலுமானவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் மற்றும் அரசாங்கம் எவ்வாறு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியும் என்பது சம்பந்தமாக அவர்களுடைய பேச்சிலிருந்து எங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது என்றார்.

மேலும் இந்த சந்திப்பில் பிரித்தானிய அமைச்சருடன் அந்த நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.