;
Athirady Tamil News

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள சீனா

0

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் தற்போது சீனா முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இருந்த போதிலும், 2022 ஏப்ரலில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாது என்று அறிவித்தமையைத் தொடர்ந்து, அதன் கடனை மறுசீரமைக்க சீனா தயக்கம் காட்டி வந்தது.

இந்தநிலையில் ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தீர்வு காண்பதற்காக இலங்கையின் கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்திருந்தன.

மைல்கல் ஒப்பந்தம்
எனினும், சீனா உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் பார்வையாளராக மட்டுமே இணைந்திருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பதாக இந்த வாரம், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கையுடன் பூர்வாங்க கடன் சிகிச்சை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.

உடனடியாக இதற்கு இலங்கையின் நிதியமைச்சு கருத்துக் கூறாதபோதும், நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது.

இது இலங்கை தனது அனைத்து வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கும் சர்வதேச நாணயத்தின் முதல் மறுஆய்வுக்கான பாதையை தெளிவுபடுத்துவதற்கும் உதவும் ‘மைல்கல் ஒப்பந்தம்’ என்று இலங்கையின் நிதியமைச்சு குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தமானது நாட்டின் ஏனைய வெளிநாட்டு கடன் வழங்குநர்களை முற்றாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடன் மறுசீரமைப்பு இந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீன வங்கியின் ஒப்பந்தம் பற்றிய செய்தி அந்த நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில் மூன்று நாடுகளும் தமது கடன் மறுசீரமைப்பை சீனாவுடன் ஒப்பிடுமாறு கோருகின்றன என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் முன்மொழிவை இறுதி செய்வதற்கு முன் சீனாவின் ஒப்பந்தத்தின் விபரங்களை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று ஜப்பானிய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

உலக வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ள டொலர்கள்
இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2023 மார்ச் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 36.4 பில்லியன் ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை இலக்குகளின்படி, இலங்கை தனது ஒட்டுமொத்த கடனை கிட்டத்தட்ட 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க திட்டமிட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை தனது வெளிநாட்டு கடனாளிகளிடம் 30 வீதமான முடியை வெட்டுமாறு( மறுசீரமைப்புமாறு) கோருகிறது. அதில், 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருதரப்புக் கடனாகவும், 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி நிதியம் போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பலதரப்புக் கடனாகவும் இருந்தன. 14.7 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வணிகக் கடன்களாகும்.

முக்கியமாக இறையாண்மைப் பத்திரங்களைக் கொண்ட கடன்களாகும். 2023 மார்ச் மாத இறுதியில், இலங்கை சீனாவுக்கு 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களும், இந்தியாவுக்கு 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களும், பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் ஜப்பானுக்கு 2.68 பில்லியன் அமெரிக்க டொலர்களும் கடன்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 5.65 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கொண்டுள்ளது உலக வங்கிக்கு 3.88 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.