;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய நிறுவனத்தின் செயற்பாடுகளை தடுப்போம்: சாள்ஸ் எம்.பி காட்டம்

0

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் மணல் அகழ்வு முயற்சிகளை தடுப்பதற்கான முழு முயற்சியையும் எடுப்போம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவு பகுதிக்குள் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இங்கு அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

தொடர்ச்சியான எதிர்ப்பு
இது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக எங்களுடைய எதிர்ப்பை காண்பித்து வருகின்றோம். இந்த நிலையில் அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அழைப்பின் பேரில் பல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மன்னார் தீவு பகுதிக்குள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அறிந்தோம்.

அன்று நாடாளுமன்ற தினம் என்பதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

அதே நேரம் அன்றைய நாள் நான் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னார் தீவினுடைய நிலப்பரப்பும் மன்னார் கடல் நிலப்பரப்பின் அமைவும் சம அளவாக இருப்பதால் இங்கு அகழ்பணி மேற்கொண்டால் தீவு அழிந்து போகும். எனவே வந்திருக்கும் அதிகாரியிடம் இதை தெரிவிக்கும் படியும் இங்கே அகழ்வு பணியை மேற்கொள்ள மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி கிடைக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இருப்பதால் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு தெரிவித்திருந்தேன்.

இதற்கு அடுத்த நாள் நேரடியாக நான் கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து இந்த மணல் அகழ்வு தொடர்பாகவும் மணல் அகழ்வுக்கான ஆய்வு தொடர்பாகவும் எனது 100 சதவீத எதிர்ப்பை தெரிவித்த போது ஆளுநர் அதற்கு இணங்கி இருந்தார்.

மன்னார் தீவினுடைய நில அமைப்பை பொறுத்தவரையில் இங்கு ஆராய்ச்சி, அகழ்வு மேற்கொண்டால் எதிர் காலத்தில் மன்னார் தீவு அழிவதற்கு வாய்ப்பாக இருக்கும் என ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

எனவே இந்த முயற்சியை இந்த நிறுவனம் கைவிட வேண்டும் என அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாக நாங்கள் கூறி வருகின்றோம். எங்களுடைய தீவு பகுதிக்குள் எந்த விதமான ஆராய்ச்சியோ அகழ்வுப்பணியோ மேற்கொள்ள வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அங்குள்ள மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சமூக அமைப்புகளும் இந்த கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கான முழு முயற்சியும் எடுப்பார்கள்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.