;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!

0

ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்பை எச்சரிக்கும் விதத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவலர்கள் (ஐஆர்ஜிசி) வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் தொடரும் பட்சத்தில் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஹோர்முஸ் வழியாக கொண்டு செல்ல முடியாது என்று சவால் விடுத்தது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் 16 கப்பல்கள் உள்பட ஈரானின் பல கடற்படை கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்காவின் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இதுதொடர்பான காணொலியையும் அமெரிக்க பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் ஏதேனும் கண்ணிவெடிகள் வைத்திருந்தால் உடனடியாக அதனை ஈரான் அகற்ற வேண்டும். கண்ணிவெடி வைக்கப்பட்டு, அவற்றை அகற்றாமல் இருந்தால், இதுவரை இல்லாத வகையிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகு அல்லது கப்பல்களை அழிக்க போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணையை பயன்படுத்துகிறோம். கண்ணிவெடி பதிக்கும் கப்பல்களை தாக்கி முற்றிலும் அழித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.