;
Athirady Tamil News

ரூ. 17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நெப்போலியன் தொப்பி!

0

சாயம்போன, விரிசல் கண்ட இரு முனைத் தொப்பியொன்றை ரூ. 17.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் ஒருவர்!

தொப்பிக்கு அல்ல மதிப்பு, அதை யார் அணிந்திருந்தார் என்பதால்தான் இருக்கிறது மதிப்பு – பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் போனபார்ட்!

ஆம், 21 லட்சம் டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அந்தத் தொப்பியை அணிந்திருந்தவர் மாவீரன் நெப்போலியன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்துகொண்டு ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி இது. நெப்போலியன் அணிந்திருந்த உடைமைகள் சிலவற்றில் இதுவும் ஒன்று.

கடந்த ஆண்டு இறந்துவிட்ட பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவரின் சேகரிப்பிலிருந்த இந்தத் தொப்பி உள்ளிட்ட நெப்போலியன் தொடர்பான சில அரும்பொருள்கள், பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பிதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

தொப்பி தொடக்கத்தில் 6.5 லட்சம் டாலர் என மதிப்பிடப்பட்டது. தொடர்ந்து தொகை உயர்ந்துகொண்டே சென்றது. முடிவில் 21 லட்சம் டாலருக்குத் தொப்பியை ஓஸுனா ஏல மையத்தின் தலைவர் ழான் பே ஓஸுனா ஏலத்தில் எடுத்தார்.

நெப்போலியன் தொப்பியை ஏலத்தில் ஓஸுனா எடுத்ததும் அரங்கிலிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

பொதுவாகத் தங்கள் இருமுனைத் தொப்பிகளின் இரு முனைகளும் முன்னும் பின்னும் இருக்குமாறுதான் மற்றவர்கள் அணிவார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் தொப்பியின் இரு முனைகளும் தன் இரு தோள்களின் பக்கம் இருக்குமாறு அணிவார். இந்தப் பாணிக்குப் போர்க்களப் பாணி என்று பெயர். இதன் காரணமாக சண்டைகளின்போது, களத்தில் தங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பதை நெப்போலியனின் படை வீர்ர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில நாள்களில் நெப்போலியன் பற்றிய ஆர்வத்தை மக்களிடம் மீண்டும் தூண்டக்கூடிய வகையில், ரிட்லி ஸ்காட்டின் நெப்போலியன் திரைப்படம் வெளிவரும் நிலையில், இந்த ஏலம் நடந்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.