;
Athirady Tamil News

கேரள பல்கலைக்கழகத்தில் பயங்கரம்… நால்வர் மரணம்: காயங்களுடன் தப்பிய 64 மாணவர்கள்

0

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறைந்தது 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நால்வரின் நிலை கவலைக்கிடம்
காயமடைந்த மாணவர்களின் நால்வரின் நிலை கவலைக்கிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் CUSAT எனப்படும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியின் போது நடந்துள்ளது.

வளாகத்தில் உள்ள ஒரு திறந்தவெளி அரங்கத்தில் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இதில் பாடகி நிகிதா காந்தி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்.

அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நுழைவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் மழை பெய்யத் தொடங்கியபோது நிலைமை மாறியதாக கூறப்படுகிறது.

வெளியில் காத்திருந்த மக்கள் மழையில் இருந்து தப்ப அரங்கத்திற்குள் விரைந்தனர், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காயங்களுடன் தப்பிய சுமார் 64 மாணவர்கள் மீட்கப்பட்டு, சமீபத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

மிகவும் துரதிருஷ்டவசமானது
இதனிடையே, இரு மாணவிகள் உட்பட நால்வர் சடலமாக மீட்கப்பட்டு, கொச்சியில் உள்ள களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது எனவும் காயமடைந்த 46 பேர் களமசேரி மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டனர் எனவும், காயமடைந்த நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்களில் இருவர் தனியார் மருத்துவமனையிலும், மற்ற இருவரும் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.