;
Athirady Tamil News

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது

0

கதிர்காமம் ஆலயத்திற்குச் சொந்தமான தங்கத் தட்டு (Tray) காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பிரதான பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால ரி. ரத்நாயக்க, இன்று (27.12.2023) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வரும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த (19.12.2023) ஆம் திகதி தேவாலயத்தின் சேமிப்பு அறைக்கு பொறுப்பான பூசகர் கொழும்பு குற்றவியல் பிரிவில் சரணடைந்துள்ளார்.

அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, இரு பூசகர்களையும் CCD யினரை கைது செய்யுமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய குறித்த பூசகர்களின் வீடுகளுக்குச் சென்றபோது, ​​அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

தங்கத் தட்டுத் தொடர்பில் வெளியானத் தகவல்
2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்த ‘அங்கொட லொக்கா’ எனும் பிரபல பாதாளக் கும்பல் தலைவனின் மனைவி, கதிர்காமம் தேவாலயத்திற்கு 2020 ஆம் ஆண்டில் 38 பவுண்கள் கொண்ட தங்கத் தட்டை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான பூசகரான சோமிபால ரத்நாயக்கவின் அறைக்குள் குறித்த தங்கத் தட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த தட்டு காணாமல் போனதை அறிந்ததைத் தொடர்ந்து, கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே இனால் 2021 இல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விசாரணையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் CCD யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய, சந்தேகநபர்களை கைது செய்யும் அதிகாரிகள் இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கேட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.