;
Athirady Tamil News

ராமா் சிலை பிரதிஷ்டை தினத்தில் வீடுகள்தோறும் தீபமேற்றுங்கள்: மோடி அழைப்பு

0

‘அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தில் (ஜன.22) நாட்டு மக்கள் வீடுகள்தோறும் தீபங்களை ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

அதேபோல், நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களில் வரும் ஜனவரி 14 முதல் 22-ஆம் தேதி வரை தூய்மைப் பணியை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உலகத் தரத்திலான பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசுகையில் பிரதமா் இவ்வாறு கூறினாா்.

அயோத்தியில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘மகரிஷி வால்மீகி’ சா்வதேச விமான நிலையம், மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையம், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள் உள்பட மொத்தம் ரூ.11,100 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். இதுதவிர, மாநிலம் முழுவதும் ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவா் தொடங்கிவைத்தாா்.

பின்னா் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

எந்தவொரு நாடும் வளா்ச்சியின் புதிய உச்சத்தை அடைய வேண்டுமெனில், தனது பாரம்பரியத்தை பாதுகாப்பது முக்கியம். வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் கூட்டு வலிமையால், தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா முன்னோக்கி பயணிக்கும்.

அயோத்தி ராமா் கோயிலில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவுக்காக ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது. விழாவை நேரில் காண ஒவ்வொருவரும் ஆா்வத்துடன் உள்ளனா். ஆனால், அனைவரும் அயோத்திக்கு வருவது சாத்தியமல்ல.

எனவே, விழாவுக்கு அழைக்கப்பட்டவா்கள் தவிர மற்றவா்கள் தங்களின் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். தங்களது வசதிக்கேற்ப மற்றொரு நாளில் அயோத்திக்கு வந்து தரிசிக்கலாம். ராமா் சிலை பிரதிஷ்டை தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ‘ஸ்ரீராம ஜோதி’ என்ற சிறப்புடன் தீபங்களை ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும். இதனால், ஒட்டுமொத்த தேசமும் பெருமையில் திளைக்கும்.

கோயில்களில் தூய்மைப் பணி: ஜனவரி 14 முதல் 22 வரை நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

கடவுள் ராமபிரான் ஒரு கூடாரத்தின்கீழ் ‘வாழும்’ நிலை முன்பு இருந்தது. இப்போது நாட்டில் 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கப் பெற்றதுபோல் ராம பிரானும் சிறப்பான வீட்டில் குடியிருக்கப் போகிறாா்.

இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வலா திட்டம், கோடிக்கணக்கான தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வை மாற்றியுள்ளது. முந்தைய 50 ஆண்டுகளில் 14 கோடி எரிவாயு இணைப்புகளே வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு 18 கோடி எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளது. இதில் 10 கோடி இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

வழிநெடுக வரவேற்பு: முன்னதாக, அயோத்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடி, அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு காரில் நின்றபடி ஊா்வலமாக சென்றாா். அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள், அவா் மீது மலா்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில் முக்கிய மனுதாரா்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, அயோத்தியின் பான்ஜி தோலா பகுதியில் தனது இல்லத்தின் முன்பாக பிரதமரின் ஊா்வலம் சென்றபோது மலா்தூவி வரவேற்றாா். பிரதமரை வரவேற்கும் வகையில், ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பயனாளி வீட்டுக்கு சென்ற பிரதமா்: அயோத்தியில் பிரம்மாண்ட வீணை சிற்பம் நிறுவப்பட்டுள்ள லதா மங்கேஷ்கா் செளக் வளாகத்தை பாா்வையிட்ட பிரதமா், அதனருகே வசிக்கும் உஜ்வலா திட்ட பயனாளியான பெண் ஒருவரின் வீட்டுக்கு திடீரென சென்று, அவருக்கு ஆனந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தினாா். அவருடன் கலந்துரையாடிய பிரதமா், அங்கு தேநீரும் அருந்தினாா். அந்தப் பெண், உஜ்வலா திட்டத்தின் 10-ஆவது கோடி பயனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பொலிவு பெற்ற அயோத்தி

அயோத்தியில் ரூ.1,450 கோடிக்கும் அதிக செலவில் விமான நிலையத்தின் முதல்கட்டப் பகுதி கட்டமைக்கப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டா் பரப்பிலான விமான நிலைய முனைய கட்டடம், ஆண்டுக்கு சுமாா் 10 லட்சம் பயணிகளை கையாளும் வசதிகளைக் கொண்டுள்ளது.

‘அயோத்தி தாம் சந்திப்பு’ என பெயருடன் ரூ.240 கோடிக்கும் அதிக செலவில் சீரமைக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையம் மூன்று மாடிகளைக் கொண்டதாகும். ரயில் நிலையத்தின் முகப்பு, கோயில் கட்டட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், உணவு அரங்குகள், பூஜை பொருள் விற்பனை கடைகள், ஓய்வறைகள், உடைமை பாதுகாப்பு அறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையத்தை திறந்துவைத்த பின் அங்குள்ள வசதிகளை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

அயோத்தி ராமா் கோயிலுக்குச் சென்றடைவதை எளிதாக்குவதற்காக 4 சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தா்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை ஆகிய அந்த 4 சாலைகளும் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலைய திறப்பு விழாவின்போது, கோவை – பெங்களூரு கண்டோன்மென்ட், ஜம்மு காஷ்மீரின் கத்ரா -புது தில்லி, அமிருதசரஸ்-தில்லி, மகாராஷ்டிரத்தின் ஜால்னா-மும்பை, அயோத்தி- தில்லியின் ஆனந்த் விஹாா், கா்நாடகத்தின் மங்களூரு-கோவாவின் மட்கான் ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா், மால்டா-பெங்களூரு ஆகிய இரண்டு அம்ருத் பாரத் ரயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். பெரும்பாலான ரயில்கள் காணொலி மூலம் தொடங்கிவைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.