;
Athirady Tamil News

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி 2 படகுகளுடன் காரைக்கால் பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த, படகின் உரிமையாளர் உள்ளிட்ட 13 மீனவர்கள், 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 22 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், கைது நடவடிக்கையின் போது மீனவர்களால் தாக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூவர் காயமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டில், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய 12 மீனவர்களுக்கெதிரான வழக்கில், படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்து, சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விளக்கத்தை வழங்க வேண்டியிருப்பதன் காரணமாக அவர்களை ஜனவரி 3 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த 12 இந்திய மீனவர்களும் இன்று புதன்கிழமை (03) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.